Wednesday, March 17, 2010

புதிய இடம்...

ரொம்ப நாளாகி விட்டது இங்கு எழுதி...

ஏனோ வொர்ட்பிரஸ்ஸை பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வளர அதில் அகிலின் அட்டஹாசங்களை பதிவும் செய்ய ஆரம்பித்து விட, இந்த பக்கம் வரும் ஆர்வம் குறைந்து விட்டது... இனிமேல் அங்கேயே எழுதலாம் என்று எண்ணம் -

மீதியை அங்கே வந்து படியுங்களேன்

ஜெயா.

Monday, March 31, 2008

போலிங் ஆடலயோ போலிங்...

ரொம்ப நாளாகிவிட்டது எழுதி... இனி மேலாவது அடிக்கடி எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்பதிவை எழுதுகிறேன்....


அலுவலகத்தில் ஒரு போட்டிக்கான அறிவிப்பினை பார்த்தேன், இன்டர் ஆபிஸ் இன்டோர் கேம்ஸ் - கேரம், செஸ், பெட்மின்டன், போலிங் என கார்ப்பரேட் மக்களின் திறமையை சோதிக்கும் பல போட்டிகள் நடை பெறப் போகின்றது என்று குறிப்பிட்டு பங்கேற்ப்போர் விவரம் கேட்டு எழுதி இருந்தனர். எங்கள் அலுவலகத்தில் இருந்து கூட பலரும் பங்கேற்க்கும் போட்டிகளில், போலிங் செய்வதற்க்கு மட்டும் யாரும் பெயர் கொடுக்க வில்லை என்றதும் என்னுடைய இயல்பான ஆர்வக்கோளாறு உந்தி தள்ள, நாம் போய் ஏன் நம்முடைய போலிங் திறமையை ஊருக்கு காட்ட கூடாது என்ற ஒரு எண்ணத்தில் சென்ற போது, அது ஒரு குழு போட்டி என்றும் நான்கு பேர்கள் தேவை என்றும் தெரிய வந்தது. இது கூட தெரியாமல் வந்து விட்டாயா பெயர் தருவதற்க்கு போன்ற ஏளன பார்வைகளை நாம் மதிப்பதில்லை பார்த்துக் கொள்ளுங்கள்...


சரி என்று என்னைப் போல போலிங் பற்றி எந்த இழவும் தெரிந்து இருக்க கூடாது என்ற கட்டாய ருல்க்கு உட்பட்டு மூன்று பேர் சேர்ந்து கொள்ள, நாங்களும் ஒரு குழுவாக பெயர் கொடுத்தோம். எங்கள் அலுவலகத்தில் இருந்தே ஆட்டம் ஆட தெரிந்த இன்னொரு குழுவும் சேர்ந்து இருந்தனர். என்னதான் இருந்தாலும் தெரியாமல் ஆடுவதுதான் உசத்தி என்றும், ஆட்டம் தெரிந்தால் யார் வேண்டுமானாலும் ஆடலாமே என்று உதார் விட்டுக்கொண்டு இருந்தோம்.


போட்டி இடம் மாயாஜால், கிழக்கு கடற்கரை சாலை. நான் எனது 2.5 வயது மகனையும், என் குழு நண்பர் அவர் பெண்ணையும், இந்த இரு வால்களை மேய்ப்பதற்க்கு அவர் மனைவியையும் அழைத்து வந்தார். பின்னே நாங்கள் எங்கள் போலிங் திறமையை காட்டுவோமா இல்லை குழந்தைகளை மேய்ப்போமா?? இத்தனை பேர்களை கிளப்பி கூட்டிக்கொண்டு போக வேண்டாமா என்ன? 11 மணி போட்டிக்கு சரியாக 10.55 க்கு போய் சேர்ந்தோம்.


பங்கு பெறும் அனைவரும் கம்பெனி பெயர் பதித்த டி. ஷர்ட் தான் போட்டு வர வேண்டும் என்ற கட்டாய விதி இருந்த்தால் போலிங் இடம் ஜெ ஜெ என்று ஒரு மினி டி.ஷர்ட் ப்ரமோஷனல் கடை போல இருந்த்து. எங்களை போலவே பல்வேறு பெரிய கம்பனி மக்கள் பொழப்பில்லாமல் வந்து காத்து இருந்தனர்.


ஆடுகளம் திறந்தவுடன் காத்து இருந்த மக்கள் அனைவரும் டிரயல்ஸ் போட்டு பார்த்துக் கொண்டு இருந்தனர். சரி நாமும் நம் திறமையை சோதித்து பார்க்கலாம் என்று நினைத்த போது, எப்படி தான் மூக்கு வேர்க்குமோ, அங்கிருந்த பணியாளர் வந்து யாரும் பந்து வீசக்கூடாது என்று கூறி சென்று விட்டார்.


எங்களுடையது குழு முதல் ரவுண்டில் ஆடுவதாக இல்லை என்று தெரிந்தபின் கண்களை அக்கம் பக்கம் சுழல விட்டேன்... கண்ட காட்சிகளை என்ன என்று சொல்லுவது...


மூன்றெழுத்து பாபுலர் கம்பெனியிலிருந்து இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் உற்சாகபடுத்த என்று சிலர் வந்து இருந்தன. பெண்கள் இருவரும் அழகிகள் என்று கூற முடியாவிட்டாலும், பார்ப்பதற்க்கு நன்றாகவே இருந்தனர். குழுவில் ஒருவன் பந்தை சூப்பராக வீசி ஸ்ரைக்(போலிங் டெர்மினாலாஜி உபயோகிப்பதை கவனியுங்கள்) செய்து விட்டு வந்து அமர, இரு பக்கம் இருந்த இரு இருக்கைகளில் இரண்டு பெண்களும் அமர்ந்து அவனை பாராட்டினர். அந்த பையனும் சரியான ரியாக்ஷ்ன் கொடுத்து, இருக்கையின் பிடிமேலும், இரு பெண்களின் தோள்களிலும் கை போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டான். அடப்பாவி என்று நான் பார்த்து கொண்டு இருக்க இரு பெண்களின் முகத்திலும் பெருமையை தவிர வேறு எந்த எக்ஸ்பிரஷனையும் காணோம்... இத்தனைக்கும் பையன் சூப்பர் எல்லாம் இல்லை, சாதாரனமாகதான் இருந்தான்.... ஆணும் பெண்ணும் தொட்டு பேசிக் கொள்வது தப்பு என்னும் மனப்பாண்மை எனக்கு இல்லை என்றாலும், ஒரே சமயத்தில் இரண்டு பெண்களையும் உராய்ந்து பேசும் லாஜிக் என்ன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.... உங்களுக்கு தெரிந்து இருந்தால் சொல்லுங்களேன். கொடுமை என்ன என்றால் அந்த பெண்களும் ஒன்றும் சொல்லவில்லை, அப்படியே ஒரு வள்ளி தெய்வயானை எந்த உணர்ச்சியில் இருப்பார்களோ அப்படி ஒரு போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தனர்.


சரி, இது போல குடும்ப காட்சிகள் நிறைந்த இடத்திற்க்கு வந்து இருக்கோம் போல என்று மனதை தேற்றிக்கொண்டு ஆட்டத்தை பார்க்க ஆரம்பித்தோம், ஒரு மினி பிணம் அளவிற்க்கு கனக்கும் பந்தை எடுத்து தூரத்தில் இருக்கும் ஸ்டிக்ஸை அடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், அனைவரும் ஆடிக்கொண்டு இருந்தனர். வந்து இருந்த மற்றும் சில பெண்கள் பயங்கர சூப்ப்ராக பந்து வீசுவதைப் பார்த்தும் கொஞ்சம் ஜுரம் வருகின்றார் போல இருந்தது...


இன்னொரு புறம், இன்னொரு சூப்பர் காட்சி. முதல் காட்சி ஒரு விதம் என்றால் இது இன்னொரு வகை. ஆட வந்து இருந்தவனின் பெண் தோழி, ஒரு இன்ச் அளவிற்கு மேக்கப் செய்து கொண்டு, நவீன நாகரீக ஆடை அணிந்து வந்து இருந்தாள். கண்டிப்பாக அந்த உடையை பற்றி சொல்லியியே தீர வேண்டும். உள்ளே ஒரு கருப்பு உடலை கவ்வி பிடிக்கின்ற உடை, மேல அதே போல முழங்கால் வரை ஒரு பூப்போட்ட டாப்ஸ், அதற்க்கு மேலே இடுப்பு வரை வருகின்ற இன்னொரு டாப்ஸ். கீழே கருப்பு கலர் டைட்ஸ். இத்தனை போட்டு இருந்தாலும் பலன் ஒன்றும் இல்லை :-) இப்படி பக்கத்தில் ஒருத்தி இருந்தால் எப்படி அந்த பையன் பாலை பார்த்து விளையாடுவான்? ஏதோ சொதப்பலாக போட்டுக் கொண்டு இருந்தான். அதே பெண்ணை அந்த பையன் மேக்கப் இல்லாமல் தெருவில் பார்த்தான் என்றால் அவனுக்கே அடையாளம் தெரிவது கஷ்டம் என்று நினைக்கிறேன்.


இந்த மாதிரி பராக்கு பார்த்துக் கொண்டும் குழந்தைகளை மேய்த்து கொண்டும் இருந்ததில், முதல் ரவுண்ட் முடிந்து விட, கட முடா என்ற வயிற்றுக்கு கிழே இருந்த restaurentக்கு சென்று சாப்பிட்டு விட்டு மேலே வருவதற்க்குள், இரண்டாவது ரவுண்டும் ஆரம்பித்து விட, இப்படியே போனால் நம்முடைய டர்ன் வருவதற்க்குள் பொழுது சாய்ந்து விடும் என்று ஆறாவது அறிவு எடுத்து உரைக்க அங்கே இருந்த ஆர்கனைசர் வால் பிடித்து அலைய ஆரம்பித்தோம். குழந்தைகளை அழைத்து சென்றது எதற்க்கு உதவியதோ இல்லையோ இதற்க்கு ரொம்ப நல்லா உதவியது, 5 நிமிடத்திற்க்கு ஒருமுறை அவரிடம் போய், சார் குழந்தைகளை அழைத்து கொண்டு வந்து இருக்கின்றோம், திரும்ப போகனும் என்று நச்சு செய்து சான்ஸ் வாங்கி விட்டோம்...


அடுத்ததாக ஆட்ட திறமையை காட்ட வேண்டிய தருணம்... எங்களுடன் ஆட வேண்டிய டீம் மக்களுடன் அறிமுகம் ஆகிக் கொண்டோம், அவர்கள் எங்களை கேட்ட முதல் கேள்வி, "எங்களுக்கு ஆட தெரியாது, உங்களுக்கு தெரியுமா?" அடடா நமக்கு ஏத்த மக்கள்தான் வந்து வாய்த்து இருக்கின்றார்கள் என்ற குஷியுடன் ஆட ஆரம்பித்தோம். நான்கு பேரில் ஒருத்தர் ஹிந்தி பட நடிகர் போல நல்ல ஸ்மார்ட்டாகா இருந்தார், சரி நமக்கு ஆடுவதற்க்கு ஒரு மோடிவேஷன் என்று, நான் தான் முதலில் களமிறங்கினேன். ஒவ்வொரு பாலும் சும்மா சொல்ல கூடாது ஒரு 10 கிலோ கனக்கும் போல, அதை எப்படி மூன்று விரல்களை உபயோகித்து உருட்டி விடுவது?? நான் விட்ட பந்தை நானே பின்னே ஓடிப் போய் தள்ளி விட வேண்டிய வேகத்தில் மெதுவாக போய் அடித்தது. ஏதோ ஒரு 5, 6 விழுந்தது. திரும்ப போட்ட போது, சுத்தம், அடுத்த லேனுக்கு சென்று விடுவதை போல ஒரு ஓரத்தில் உருண்டு விட்டது. பக்கத்தில் நாங்கள் நச்சு செய்த ஆர்கனைசர், இதற்க்கா இந்த அட்டஹாசம் செய்து சான்ஸ் வாங்கினீர்கள் என்று கேவல லுக் விட்டு கொண்டு இருந்ததை யாராவது கவனிப்பார்களா என்ன??


மற்ற குழு நண்பர்கள் கதையும் அதே தான்... ஒருவர் மட்டும் அடிக்க வேண்டிய பொருட்களை தன்னுடைய வருங்கால மனைவியாக நினைத்து போட்டு தாக்க, எங்கள் ஸ்கோர் உயர்ந்து கொண்டு இருந்தது. நான் ஒரிரண்டு முறை பத்தையும் அடித்து இருந்து இருப்பேன்.. நேராக அடித்தாலும், நம்முடைய இளகிய மனதிற்க்கும், கொடி போன்ற உடலுக்கும் (சரி சரி, கொஞ்சம் பெரிய கொடி) கைகளுக்கும் வீசி எறியும் திறமை பத்தவில்லை...


முடிவினை நெருங்கும் போது, நாங்கள் பந்தை போட்டோமா,அல்லது அது தானாக உருவிக் கொண்டு ஓடிவிட்டதா என்று தெரியாத நிலைமை. நம் ஹீரோவும் சொதப்பலாக தான் போட்டார், என்பது ஒரு ஆறுதல். அப்படி இப்படி என்று பத்து சான்ஸும் முடிய, எங்கள் ஸ்கோர் அவர்களை விட 50 பாய்ன்ட்ஸ் அதிகமாகிவிட நாங்கள் வென்றவர்கள் ஆன சந்தோஷத்தில் குதிக்க, ஆர்கனைசர் வந்து ஒரு குண்டை போட்டார், ஆடிய மொத்த குழுவினரின் மதிப்பெண்களை பார்த்து முதல் 10 ஸ்கோகர்கள் தான் அடுத்த ரவுண்டிற்க்கு தேர்வாவர் என. அப்படிப் பார்த்தால் நாங்கள் கடைசி பத்தில் அல்லவா வருவோம்???


சரி ஏதோ வந்ததிற்கு நன்றாக ஆடினோம், பொது அறிவினை வளர்த்துக் கொண்டோம், காண வேண்டிய அற்புதமான காட்சிகளை கண்டோம், ஆர்கனைசர்கள் கொடுத்த கூப்பனின் மூலம் கிழே திரும்ப ஐஸ்கிரீம் சாப்பிட்டோம், என ஒரு சனிக்கிழமை பொழுதை நல்ல விதமாக கழித்தோம் என்ற திருப்தியுடன் வீடு திரும்பினோம். அடுத்த வாரம் முழுவதும் அலுவலகத்தில் நாங்கள் ஜெயித்த கதையை தேய்ந்த ரிக்கார்ட் போல போவோர் வருவோர் அனைவரும் காதை பொத்தி கொண்டு ஓடும் அளவிற்க்கு பீத்திக்கொண்ட கதையினை சொல்லவும் வேண்டுமா என்ன??

ஜெயா.

Wednesday, July 4, 2007

சமையல்... சமையல்...

சீசனுக்கு ஒரு கிறுக்கு பிடிக்கும் எனக்கு. நீங்கள் சீசனுக்குதானா என்று கேட்பது காதில் விழுகிறது, எப்போதும் இருக்கும் கிறுக்குதனம் இல்லாமல், யாராவது ஏதாவது செய்வதைப் பார்த்தால், அல்லது ஏதாவது புத்தகதில் பார்த்தால் என புதிதின் தொடக்கம் ஏதாவது இருக்கும்..


பத்தாம் வகுப்பின் பள்ளி முடிந்து விடுமுறை காலம். என்னுடைய ஒரு நன்பனின் அம்மா மிகவும் அருமையாக சமைப்பார்கள், home science graduate. பெண் குழந்தை இல்லாத காரணத்தால் எங்களிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள். இரண்டு நாள் அவர்கள் சமையலை சாப்பிட்டவுடன், சமையல் கத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை வந்த்து. அவர்களும் ஆசையாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். சாதா சாம்பார், கூட்டு இவற்றில் என்ன இருக்கின்றது என்று எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் என்று எண்ணி முதலில் இனிப்பில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று விதம் விதமான இனிப்புகள் கற்றுக் கொண்டேன்.

குலாப் ஜாமூன் (குலாப் ஜாமூனில் என்ன இருக்கிறது கற்று கொள்ளுவதற்க்கு என்று எள்ளி நகையாடுவர்களுக்கு - பாக்கெட் ஜாமுன் இல்லை மக்களே, பாலிலிருந்து கோவா எடுத்து செய்வது...) பாசுந்தி, பால்கோவா என்று பட்டியல் நீண்டது.

சனி ஞாயிறு வந்த்தால் என் அட்டஹாசம் தாங்க முடியாது. சமைப்பது என்னவோ சமையலறையில் என்றாலும், வீடு மொத்தமே அல்லோகலப்படும்.
டி வி யில் வரும் Star hotel cheff கூட இந்த scene போட மாட்டார். கடைசியில் வரும் final product என்ன என்று நான் சொல்லித்தான் மற்றவர்களுக்கு தெரிய வரும். அதை கண்டு பிடிக்க ஒரு போட்டி பந்தியமே நடக்கும். நான் சமைக்கிறேன் என்றால் எங்கள் வீட்டு பாதி கூட்டத்திற்க்கு ஏதாவது ஒரு முக்கியமான வேலை வந்துவிடும்... அப்படியே இருந்தாலும், இருப்பவர்களுக்கு அடுத்த நாள் வயிற்று வலி வந்து விடும். இருந்தாலும், இதனாலெல்லாம் மனம் தளராமல், என் சமையல் தொடர்ந்து கொண்டு இருந்தது.... முக்கியமான சோதனை எலி என் சமையலுக்கு என் தோழி யாமினி. நான் எது செய்தாலும், மலர்ந்த முகத்துடன் சாப்பிட்டு விட்டு, ரொம்ப பிரமாதம் என்று வாய் கூசாமல் புளுகுவாள். நானே சாப்பிட தயங்கும் பண்டங்களை கூட சாப்பிட்டு விட்டு என்னையும் சாப்பிட மோட்டிவேட் செய்வாள்.


ஒரு நாள் நானும், யாமினியும் சேர்ந்து பக்கத்தில் உள்ள ஸ்ரீ பகவானின் கோவிலுக்கு பிரசாதம் செய்து எடுத்து செல்லலாம் என்று முடிவு செய்து safe game ஆக milk sweet செய்ய முடிவு செய்தோம். பெருமையாக கோவில் காரர்களுக்கு போன் பண்ணி சொல்லியும் விட்டோம். இரண்டு லிட்டர் பால் வாங்கி, வாணலியில் உற்றி, ஊர் கதைகள் பேசிக் கொண்டே மும்மரமாக கிளறிக் கொண்டு இருந்தோம். பேச்சு சுவாரசியத்தில் சரியான பதம் வருவதற்க்கு முன்னாலேயே இறக்கி விட்டோம் என்று நினைக்கிறேன்... இறக்கியவுடன் சர்க்கரையை முதலில் போட்டு, பின்னர் இரண்டு குழம்பு கரண்டி மைதா மாவினை போட்டு பீஸ் போட வேண்டியது தான் நார்மலான ரெசிபி.

ஆனால் நாங்க செய்த தவறினால், சர்க்கரை போட்டு விட்டு இரண்டு கரண்டி மைதா போட்டால் அது போன இடம் தெரியவில்லை, இரண்டு இரண்டு கரண்டியாக கால் கிலோ மைதா வினை கொட்டியும் ஒன்றும் முன்னேற்றம் இல்லை, ஒரு மாதிரி கோந்து பசை போல இருந்தது, அதை எங்கே இருந்து பீஸ் போடுவது... பின்னர் இன்னும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து, இன்னும் கொஞ்சம் மைதா போட்டு, ஒரு மாதிரி நாங்கள் முடித்த போது அது milk sweetற்க்கு தூரத்து சொந்தம் மாதிரி கூட இல்லை.

வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல், கோவிலில் வேறு பெருமை பேசியாகிற்று, பிரசாதம் கொண்டு போகவில்லை என்றால் நன்றாக இருக்காது.. ஏதாவது கடையில் வாங்கி கொண்டு கொடுத்து விடலாம் என்றால், யாமினி அம்மாவோ, நீங்கள் செய்து உள்ள இந்த கொடுமையை எல்லாம் இங்கே சாப்பிடுவதற்கு யாரும் இல்லை, அப்படி கோவிலுக்கு எடுத்து செல்ல வில்லை என்றால், இருவரும் தினம் ஒரு கின்னமாக சாப்பிட்டு தீர்க்கணும் என்று மிரட்டவும், நாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்று கோவிலுக்கே எடுத்து செல்ல முடிவு செய்தோம்.

பூசை முடிந்து கீழே வருபவருக்கு எல்லாம் நிறைய நிறைய அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருந்தோம். யாரும் ஒன்றும் சொல்ல வில்லை, பக்தியுடன் பிரசாதம் என்று கன்னத்தில் போட்டு வாங்கிக் கொண்டனர். சரி தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணிக்கொண்டு இருந்த வேளையில் ஒரு ஆன்ட்டி வந்து, பிரசாதம் ரொம்ப நன்றாக இருந்த்தும்மா, புது மாதிரி இருக்கின்றதே. என்ன இது ஸ்வீட் என்று கேட்டார்.

நானும் யாமினியும் நடத்தாத பாடத்தில் இருந்து பரிட்சையில் கேள்வி வந்தால் எப்படி முழிப்போமோ அதை மாதிரி முழித்தோம்... சரி நான் சொல்லுவேன் என்று அவளும் அவல் சொல்லுவாள் என்று நானும் ஒரு நிமிடம் நின்றோம், இருவரும் சொல்லவில்லை என்று தெரிந்ததும் மெதுவாக பால் இனிப்பு என்றோம். அந்த ஆன்ட்டியின் முகத்தில் தெரிந்த ஒரு உணர்ச்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு பொங்கி வரும்.

சற்று நேரத்தில் சுதாரித்துகொண்டு, சிறு பெண்களாகிய எங்களை வருத்தப்பட வைக்கவும் மனசில்லாமல், தேறுதலாக, ஆமாம்ம்மா, ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள் இது ஒரு வகை போல இருக்கின்றது, ரொம்ப நன்றாக இருக்கின்றது என்று சப்பை கட்டு கட்டிவிட்டு சென்றார்கள். கோவில் சொந்தகாரர்கள் நடந்த கூத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள். எங்கள் நிலைமையை கேட்கவே வேண்டாம்.

இந்த சம்பவத்திற்க்கு பிறகு பொதுநலன் கருதி சமையல் கலையை கொஞ்ச நாள் பரனையில் போட்டு விட்டேன். ஆனாலும், யாமினியின் பிறந்த நாளுக்கு செய்த கேக், கலர் குலாப் ஜாமுன், முதன் முறையாக செய்து பார்த்த பாவ்பாஜி, இவை எல்லாம் நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்.

கல்யாணத்திற்கு பிறகாவது என் திறமையை வளர்த்துக் கொள்ளலாம் என்று பார்த்த்தால் துரதிரதிருஷ்டமாக, கூட யாரவது - என் அம்மா அல்லது அத்தை இருந்து கொண்டே இருந்தனர். ஆகையால் தனியாளாக நின்று என் திறமையை காட்டும் வாய்ப்பு கிடைக்க்வே இல்லை. கல்யாணத்திற்க்கு பின் என் வீட்டுகாரர் இளைத்து விட்டார், அதற்க்கு நான் என்னங்க செய்ய முடியும். எங்கள் வீட்டு இஸ்திரிகாரி முதல் போகின்ற கல்யாணத்தின் சத்திரத்தின் வாட்ச்மேன் உட்பட, என்ன உங்க வீட்டுக்காரர் இவ்வளவு இளைத்து விட்டாரே என்று குசலம் விசாரிப்பார்க்ள்... யோவ் இத்தனைக்கும் என் சமையல் இல்லையா என் வீட்டில், எங்க அம்மா தான் சமைக்கிறார்கள் என்று கூவி கூவி சொன்னாலும், நீங்க ஒழுங்கா பார்த்துக்கோங்க என்று என் பிரஷரை ஏற்றி விடுவார்கள்.

நானும் என் வீட்டுகாரரிடம் என் சமையல் பிரதாபங்கள் பற்றி பீற்றிக் கொண்டாலும் அவர் நீ சொல்லும் பெயர்களை எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கின்றேன், நீ செய்து பார்த்தில்லையே என்று குறை பாட, நான் மேலே நடந்த நிகழ்ச்சியைக் கூற, நான் பார்க்க வேண்டிய தேவையே இல்லை, பக்கத்தில் உள்ளா ஹோட்டடில்லேயே பார்த்து கொள்ளுகிறேன் என்று பரந்த மனப்பான்மையுடன் கூறி விட, சமையல் அறை இன்னும் என் வருகைக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டே இருக்கின்றது....

ஜெயா.

Thursday, June 28, 2007

இது ஒரு காதல் கதை

என்னுடைய தோழி, ரொம்பவும் நெருங்கியவள், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள் (நம் அளவிற்க்கு இல்லை என்று வைத்துகொள்ளுங்களேன்) பழகுவதற்க்கும் மிகவும் இனிமையானவள், காலேஜ் நாட்களிலேயே இவளை அனைவருக்கும் பிடிக்கும், ஒரு கதையின் கதாநாயகி போல் இருப்பாள்.

காலேஜ் முடிந்து வேலைக்கு சேர்ந்த போது, என் தோழி ஒரு பெரிய நிறுவனத்தில் software engineer ஆக பணியில் அமர்ந்தாள். கூடவே ஒரு பையனும் சேர்ந்தான். ஒரே டீம். நாட்கள் செல்ல, நல்ல நன்பர்கள் ஆகினர். நல்ல பையன், நல்ல படிப்பு, நல்ல வேலை, தோழிக்கு நட்பிற்க்கு மேல் ஒரு படி செல்ல ஆசையாக இருந்த்து.

பையனின் அப்பா அம்மா வெளி ஊரிலே இருந்த்தால் பாட்டியிடம் வளர்ந்த பையன். மிகவும் உலகம் தெரியாமல் வளர்த்து வைத்து இருந்த்தனர். வீடு, வீடு விட்டால் ஆபீஸ், இடையில் இருக்கும் எதுவும் அவன் கண்ணுக்கு தெரியாது.
பீச், spenscers, சினிமா, பெண்கள், எல்லாம் அவனைப் பொருத்தவரை நிலவில் கூட இல்லை அதை விட தூர கிரஹத்தில் உள்ளதாக நினைப்பு.
எங்களுக்குகோ அதற்க்கு இடையில் இருக்கும் விஷயம் மட்டும் தான் தெரியும். அம்மா கொண்டு என்று கேள்விப் பட்டு இருப்பீர்கள், பாட்டி கோண்டு வாக நாங்கள் முதலில் அவனைத்தான் பார்த்தோம்...

காலையில் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டால், நாம் என்ன பதில் சொல்லுவோம், இட்டிலி அல்லது தோசை என்று, அவனுடய டிபிக்கல் பதில் வந்து, பாட்டி இன்னைக்கு இட்டிலி செய்தா, அதைதான் சாப்பிட்டேன். பாட்டிக்கு இருக்கின்ற importance இட்டிலிக்கு இருக்காது. நாளைக்கு என்ன பிளான் என்றால், பாட்டி மாமா வீட்டுக்கு கூட்டிக்கு போக சொல்லி இருக்காங்க, அங்கே போகனும் என்பான்.

ஆனால் என்ன செய்வது, crush க்குத்தான் கண்ணில்லையே, என் தோழிக்கு அவனை மிகவும் பிடித்து இருக்கவே, சரி நாம் டிரை பண்ணிப்பார்ப்போம் என்று முடிவு பண்ணினோம். மணிக்கனக்காக உட்கார்ந்து சேட் செய்வாள் என் தோழி, அவன் வீட்டில் பூத்த பூவிலிருந்து, அவன் பாட்டியின் வெட்டி கதைகளிலிருந்து, அவன் தங்கைக்கு பிடித்த சினிமா நடிகைகளிலிருந்து, அவனுக்கு பிடித்த்ச் விஷயங்கள் உட்பட, ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கேட்டுக் கொள்ளுவாள், அதைப்போல தன்னை பற்றியும் சொல்லுவாள். முடிவில் அவன், "நான் கடவுளிக்கு நன்றி சொல்ல வேண்டும், உன் போல ஒரு friend கிடைத்தற்க்கு" ஒரு பல்ப் குடுப்பான். "அடப்பாவி எந்த ஊரிலடா உனக்கு ஒரு friend ஒரு உப்பு சப்பில்லாத கதையை ராத்திரி ஒரு மணிக்கு கேட்பாள், கொஞ்மாவது மூளையை உபயோகியேண்டா" என்று சத்தமாய் கேட்க தோன்றும்.

அந்த கொடுமைக்கு மேலாக, அவன் படித்ததும் ஒரு நல்ல கல்லூரி, அங்கே ஒரு பெண், இருவரும் காதலித்தார்களா என்பது நினைவு இல்லை ஆனால் ஏதோ காரணத்திற்க்காக பிரிந்தது மட்டும் நினைவு இருக்கிறது (அந்த பெண்ணை தேடி எப்படி இவனை கவர்ந்தாள் என்று டியுஷனுக்கு போகனும் என்று நானும் தோழியும் ரொம்ப ஆசைப்பட்டோம்). அந்த பெண்ணின் கதைகளை வேறு, சொல்லுவான், நான் இதை யாரிடம் சொல்லுவேன் உன்னை தவிர என்ற டயலாக் வேறு..

ஒரு நாள் அவன் வீட்டிற்க்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அழையா விருந்தாளியாக, எப்படி செல்வது, ஆனாலும் அந்த பாட்டியம்மாவை போய் பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவல், ஆவல் என்பதை விட வெறி என்று சொல்லலாம். வீடு தெரியாது, வீடு இருக்கிற ஏரியா தெரியும். வீட்டை கண்டு பிடிக்க ஒரு யோசனை செய்தோம். அவனை வீட்டுக்கு சாப்பிட அழைத்தோம். சாப்பிட்டு அவனுக்கு bye சொல்லி விட்டு அவனையே வண்டியில் follow செய்தோம். அவன் வீடு இருக்கும் தெருவிற்க்கு சென்று அவன் திரும்பவும், நாங்களும் திரும்பினோம். அவன் வீட்டுக்கு அருகில் மெதுவாக செல்ல வண்டியை விட்டு கிழே இறங்க பிரயத்தனம் செய்ய, அப்போது தான் நாங்கள் பார்த்தோம், அது ஆள் நடமாட்டமில்லாத ஆழ்வார்பேட்டை தெரு, திரும்பினால் நாங்கள் பின் வருவது தெரிந்து விடும் என்று... அப்படியே வண்டியை விட்டு இறங்கி, இஞ்சினைக் கூட off செய்யாமல், பக்கத்தில் பச்சை கலர் கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டி இருக்க, அதன் பின்னே ஒளிந்து மறைந்து கொண்டோம், துப்பட்டாவினை தலையில் போட்டுக் கொண்டோம், முழுக்க மறைவதற்க்காக... ஆமாம் இவனுக்கு சத்திய்மாக வந்த பாதையினை திரும்பி பார்க்கன்ற அளவிற்க்கு சாமர்த்தியம் பத்தாது என்று சர்வ நிச்சயமாக தெரிந்தாலும், தெரிந்தால் மானம் போய்விடுமே என்ற காரணத்திற்காக ஒளிந்து கொண்டோம்.

அவன் வீட்டுக்கு கொஞ்சம் அருகில் அதே அலுவலகத்தில் வேலை செய்கின்ற இன்னொரு நன்பன் வீடும் இருக்கவே, அவன் வீட்டுக்கு செல்லும் சாக்கிட்டு சென்றோம். முதல் நன்பனுக்கே எங்களை பார்த்தவுடன் அதிர்ச்சி, என்னடா இது, இந்த் அறுந்த வால்கள் வேளை கெட்ட வேலையில், இங்கே வந்து இருக்கிறார்களே என்று. சாஸ்திரத்து ஒரு 5 நிமிடம் அவன் வீட்டில் இருந்து விட்டு, ஐந்தாம் நிமிடம், நம்ம தலைவரின் வீட்டிற்க்கு கிளம்பினோம்.

வீட்டிற்க்கு போவதா வேண்டாமா என்று பயங்கர யோசனை... சரி முன் வைத்த scooty யை பின் வைக்க வேண்டாம் என்று இறங்கினோம். பாட்டியும் பேரனும் எங்களுக்கு பயங்கர வரவேற்பு. பாட்டியின் reaction ஐ பார்த்த வுடனே தெரிந்தது, பெண்கள் அவர்கள் வீட்டிற்க்கு வருவது இதுதான் முதல் தரம் என்று. முதலில் சென்ற நன்பன் வீட்டிற்க்கு செல்லவே வந்த்தாக சாதித்தோம். தோழி கண்ணில் பொறி இருந்த்தால், பாட்டியை பொறாமையினாலே எரித்து இருப்பாள். கொஞ்ச நேரம் உக்கார்ந்து கடலை போட்டு விட்டு, வீட்டிற்க்கு வந்தோம். ஒரு பாட்டி எங்கள் வாழ்க்கையில் ஒரு வில்லியாக வருவார்கள் என்று நாங்கள் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. இப்படி அழையா விருந்தாளியாக ஒரு வீட்டிற்க்கு திடுதிடு திப் என்று நுழைந்தது, மறக்க முடியாத அனுபவம்... தோழியின் காதலுக்காக இது கூட செய்யா விட்டால் எப்படி?

அந்த வருடத்தின் காதலர் தினம் வந்த போது, நான் தான் ஒரு யோசனை சொன்னேன். அதன் படி, நான் அவனுக்கு காலங்காலர்தால 6.30 மணிக்கு போன் பண்ணி, குசலம் எல்லாம் விசாரித்து விட்டு, காதலர் தின வாழ்த்து தெரிவித்து விட்டு, நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கிலி தொடராக வாழ்த்து தெரிவித்துக் கொண்டு இருக்கின்றோம், எனக்கு என்னுடைய தோழி செய்தாள், நான் உனக்கு சொல்லுகின்றேன், நீ உனக்கு மனதுக்கு பிடித்தவளுக்கு சொல், என்று என் தோழியின் பெயரை வாய் விட்டு சொல்லாத குறையாக சொல்லி வைத்தேன். அடுத்த நிமிடமே என் தோழிக்கு கால் செய்து பிளான் சரியாக சென்று கொண்டு இருக்கிறது என்று சொல்லி விட்டு, சத்தியமாக நான் அவ்வளவு உணர்ச்சி பூர்வமாக பேசியதை பார்த்து நான் தான் அவனை காதலிக்கின்றேன் என்று நினைப்பதற்க்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது என்று புலம்பிக் கொண்டு இருந்தேன். என் தோழிக்கு போன் செய்து இருந்தான் என்றால் இந்த பதிவின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்... யாருக்கு சொன்னான் என்று திரும்ப நானே கேட்டால் ரொம்ப அசிங்கமாக இருக்கும் என்று கேட்காததால் அந்த விளக்கெண்ணய் யாருக்கு சொன்னான் என்று எங்களால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை...

ஜாடைமாடையாக செயத விஷயம் எல்லாம், அவனை தவிர அலுவலக்க்தில் வேலை செய்யும் அனைவருக்கும் புரிந்தது. அலுவலத்தில் பல பேர் தோழிக்கு விண்ணப்பம் போட்டு இருந்த்து வேறு ஒரு வயித்தெரிச்சல். நேரிலோ சொல்வதற்க்கு தோழிக்கு தைரியம் இல்லை. நானாவது கேட்டு சொல்லுகின்றேன் என்றால், அதற்க்கும் என் தோழி வேண்டாம் என்று சொல்லி விடுவாள். நாம் கேட்டு, அவன் பாட்டியிடம் கேட்டு சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டால் அவமானமாக போய்விடும் ஜெயா, என்று தடுத்து விடுவாள். அவனையும் அவன் தோழர்களை மட்டும் அழைத்து விருந்து எல்லாம் கொடுத்து இருக்கிறோம், இருவரும் தனியாக பேசுவதற்க்கு நிறைய சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம், ஆனால் அந்த spark அவனுக்கு வரவே இல்லை...

ஒரு வருடத்திற்க்கு ஒரு கம்பெனி என்ற பாலிசியில் அவன் கம்பெனி மாறி சென்று விட்டான், தோழியும் புது இடம் சென்று விட்டாள். தோழியும் இவன் பாட்டி பைத்தியத்தை நம்மால் சமாளிக்க முடியாது, மற்றும், தானாக தோன்றாதை நாம் கட்டாயப் படுத்தி செய்து, அப்புறம் வாழ்நாள் முழுசுக்கும் கஷ்டபடுவ்தாக வாழ்க்கை அமைந்து விடக்கூடாது என்று, crush தூக்கி மூட்டை கட்டி பரனையில் போட்டு விட்டாள். ஆனாலும் எனக்குள் சீ இந்த பையன் கொஞ்சம் புத்திசாலியாக இருந்திருந்தால் ஒரு அருமையான பெண்ணை திருமணம் செய்து கொண்டு இருந்து இருக்கலாமே என்ற அங்கலாய்ப்பு குறைவதாக இல்லை.

இப்போதும், சேட்டில் வந்தால் அவன் டயலாக் மாறுவதே இல்லை, i should thank god for giving such friends...

ஜெயா.

Tuesday, June 26, 2007

ஷாருக்கானும் நாங்களும்...

பள்ளிப்படிப்பு முடியும் வரை திரைப்படங்களுக்கு அவ்வளவாக சென்றதில்லை அப்படியே சென்றாலும், குடும்பத்துடன் செல்வதோடு சரி, ஆறு மாதற்க்கு ஒரு படம் அல்லது ஒரு வருடத்தில் ஒன்று. இப்படியே சென்று கொண்டு இருந்தால் எப்போதுதான் குஞ்சுகளுக்கு சிறகு முளைத்து வானத்தில் பறப்பது, எதற்க்கும் ஒரு ஆரம்பம் வேண்டாமா?? நாங்கள் தோழிகளாக வெளியே சென்று படம் பார்த்தது ஒரு சூப்பர் அனுபவம்.

பன்னிரண்டாம் வகுப்பு பரிட்சை முடிந்த கடைசி நாள் - ஒரு பக்கம் அய்யய்யோ பள்ளி வாழ்க்கை முடிந்து விட்டதே, நண்பர்களை பிரிந்து செல்ல வேண்டும், புது கல்லூரி வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்க வேண்டுமே என்ற பீதி எல்லாம் வயிற்றை கலக்கி கொண்டு இருக்க, ஒரு புறம் கடைசியாக எங்கேயாவது சேர்ந்து செல்லலாம் என்று முடிவு எடுத்த போது, யாமினி (என் தோழி) யின் தோழியோட அப்பா (தோழியோட தோழி நம்ம தோழிதான் பார்த்துக்கோங்க..) எங்கள் அனைவருக்கும் அப்போது சக்கை போடு போட்டுக்கொண்டு இருந்த "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" ஹிந்தி படத்திற்க்கு டிக்கட் வாங்கி கொடுத்து அனைவரும் போய் வாருங்கள் என்றார்.

மொத்தம் ஒன்பது தோழிகளாக ராயபேட்டையில் உள்ள மெலொடி தியேட்டருக்கு சென்றோம். இதில் வந்த பாதி பேருக்கு ஹிந்தி தெரியாது. ஆகவே seating arrangement வந்து, ஒரு ஹிந்தி தெரிந்தவருக்கு இரு புறத்திலும் ஹிந்தி தெரியாதவர் என அமர்ந்து கொண்டோம். எனக்கு ஹிந்தி தெரியும்.
படம் ஆரம்பித்தவுடனே, மற்றும் ஷாருக் கான் வரும் போது எல்லாம் தியேட்டர் முழுதும் பயங்கர சத்தம், அதுவும் எங்களுக்கு கொஞ்ச தூரத்தில் அமர்ந்து இருந்த ஒரு கும்பலில் ஆண் பெண் வித்தியாசமில்லாமல் பயங்கர சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தனர். நாங்கள் சே என்ன இது பொது இடத்தில் இப்படி நடந்து கொண்டு இருக்கிறார்களே என்று திட்டிக் கொண்டு இருந்தோம்.

படம் சூப்பராக போய்க் கொண்டு இருந்த போதும், இரு பக்க்கதில் உட்கார்ந்து இருந்தவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு சின்ன டயலாகாக இருந்தாலும், ஹேய் என்னடி சொல்லறான் என்று கேட்டு உயிரை வாங்குவாள்கள், அதை நான் சொல்லுவதற்க்குள், அடுத்த டயலாக் ஆரம்பித்து விட்டு இருக்கும்... பாட்டுகளுக்கு அர்த்தம் சொல்லு என்ற அளவிற்கு, படத்தை ஈடுபாட்டுடன் பார்க்கிறார்களாம், நான், "அடியே இந்த அளவிற்க்கு பாடத்தில் உனக்கு சந்தேகம் வந்திருந்தால், நீதான் state first வந்து இருப்பே" என்று நக்கல் அடிக்க கொஞ்ச நேரம் சும்மா இருந்தாள்கள். ஆனால் விவகாரமான விஷயங்களுக்கு எல்லாம், அவர்களுக்கே அர்த்தம் புரிந்து விடும், எப்படி என்றால் அது அப்படி தான்டி என்று நக்கல் அடித்துக் கொண்டு இருப்பார்கள்.

ஒரு வழியாக படம் பார்த்து விட்டு வெளியே வந்து, நானும் யாமினியும் எங்கள் scooty எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம், திரும்பி வரும் போது அந்த வழி one-way, அதுவும் இல்லாமல் எங்களுக்கு அப்போது எல்லாம் ரொம்ப வழி தெரியாது. சரி எல்லாரும் போகும் ரோட்டில் வெளியே வந்தால்,
ராயப்பேட்டை மணிகூண்டு சிக்னல் வந்த்து, எப்படி போகனும் என்று இருவருக்கும் தெரியாது. யாமினி எப்படி போகலாம் ஜெயா என்று கேட்க, நானும் படம் பார்த்த மயக்கத்தில், "யாமினி, ஷாருக்கான் படம் இப்போதானே பார்த்த, அதில் தலைவர் என்ன சொல்லறார், எப்போதும் குறுக்கு வழியை எடுக்காதீங்க.. நேர் வழியா போய் காரியத்தை சாதிச்சுக்கோங்க, சோ நம்ம நேரா போகலாம்" என்று டயலாக் விட, அவ அதுக்கு மேல அதையே வேத வாக்கா எடுத்துகிட்டு follow பன்ன, ரைட்ல போய் இருந்தா 15 நிமிஷத்தில் போய் சேர்ந்து இருக்க கூடிய சைதாப்பேட்டைக்கு, triplicane, beech road, radhakrishanan saalai, ttk road எல்லாம் சுத்தி அங்கங்கே வழி விசாரிச்சுகிட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் வீணடிச்சு 45 நிமிஷம் கழிச்சு போய் சேர்ந்தோம்.

அன்னையிலிருந்து வாழ்க்கையின் லட்சியமா, ஐரோப்பா டூர் செல்வதும்,
லண்டன் ரயில்வே ஸ்டேஷனில் பாட்டு பாடுவதும் சேர்ந்து கொண்டது.
அதன் பிறகு யாமினி திருச்சிக்கு படிக்க சென்றுவிட, நான் லோக்கல் கல்லூரியிலேயே குப்பை கொட்ட எங்கள் நட்பு கடிதங்களில் வளர்ந்து கொண்டு இருந்தது (இ மெயில் இல்லாத காலம் பாருங்க).

முதல் ஆண்டு லீவில் வந்த போது, திரும்ப ரோஹினி தியேட்டரில் அதே படத்தை திரும்ப திரையிட்டு இருக்கின்றான் என்று தெரிந்தவுடன் போய் பார்க்க கால்கள் பரபரத்துக்கொண்டு இருந்தன. யாமினி வீடு ரொம்பவே கண்டிப்பானவர்கள், எங்கேயாவது செல்வதற்க்கு permission கிடைப்பது ரொம்பவே கஷ்டம். அவள் அம்மாவிடம், ரொம்ப கெஞ்சி கூத்தாடி permission வாங்கினோம், ஆனால் கோயம்பேடு என்று சொல்லவில்லை, ஏதோ பக்கத்தில் உள்ள தியேட்டர் என்று சொல்லிவிட்டு விட்டோம் ஜூட்.

தியேட்டரில் ஓரே சத்தம் போட்டும் கூச்சலிட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தோம், பின்னே ஒரு வருஷம் காலேஜ் அனுபவம் சும்மாவா என்ன?? கொஞ்ச நேரத்தில் எங்களுக்கே தெரிந்தது, அமைதியான தியேட்டரில் சத்தம் போட்டுக் கொண்டு இருந்த ஒரே ஆட்கள் நாங்கள் தான் என்று, மனதில் ஒரு வருடத்திற்க்கு முன் நாங்கள் திட்டின பெண்கள் தான் ஞாபகம் வந்தனர். ஓகோ ரவுடிகள்
இப்படிதான் உருவாக்கபடுகின்றார்கள் என்று தெரிந்து கொண்டோம்.

திரும்ப சாதுப்பெண்கள் போல வீடு வந்து சேர்ந்து விட்டோம். எப்படி யாமினி அம்மாவிற்க்கு தெரிய வந்தது என்று நினைவு இல்லை, பேப்பர் பார்த்தார்களா அல்லது டிக்கட் பார்த்தார்களா என்று, ஆனால் வாங்கினோம் ஒரு டோஸ் மூட்டை. பயங்கர திட்டு, பொய் சொன்னதிற்கு, சொல்லாமல்
அவ்வளவு தூரம் scooty எடுத்துக் கொண்டு தனியாக போனதிற்க்கு என்று வைத்து தாளித்து எடுத்து விட்டார்கள். வாய் மூடிக்கொண்டு எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அடித்த கொட்டத்திற்க்கு கம்மிதான் என்று ஜீரணித்து கொண்டு விட்டோம்.

படம் பார்த்த அன்றிலிருந்து யாமினியும் திருச்சி டிரெயினுக்கு லேட்டாக சென்று பார்த்தால் யாரவது கை கொடுப்பார்களா என்று, சொட்டை தலை டிக்கெட் கலக்க்டரை தவிர ஒரு பயலையும் காணோம். நாம் கஜோலாக இருந்தாலும், ஷாருக்கானுக்கு கொடுத்து வைக்க வில்லை என்றால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?

ஜெயா.

Monday, June 25, 2007

சுட்டதும் சுடாததும்...

லைப்ரரி என்றால் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? புத்தங்கள், அலமாரிகள், பேப்பர் வாசனை, நூலக நன்பர்கள், என்று வளரும் இல்லையா.. எங்களுக்கோ, பின்னால் குரல் கேட்க கேட்க திரும்பிப் பாராமல் தலை தெரிக்க ஒடின அனுபவம் தான் ஞாபகம் வரும்... என்ன என்று கேட்கீறீர்களா, பதிவை தொடர்ந்து படியுங்கள்..

நான், எனது அக்கா ஹேமா மற்றும் எனது டியுஷன் தோழி யாமினி மூவரும் மிகச் சிறந்த தோழிகள். நானும் யாமினியும் ஒரே வகுப்பு ஆனால் வெவ்வேறு பள்ளிகள், எனது அக்கா எங்களை விட ஒரு வயது தான் மூத்தவர். ஆகையால் எது செய்தாலும் சேர்ந்து செய்வோம். மூவரிடமும் சைக்கிள் உண்டு.

நாங்கள் ஒன்பதாவது படித்துக் கொண்டு இருந்த நேரம் என்று நினைக்கிறேன். புத்தக்ங்கள் படிப்பது மூவருக்குமே ரொம்ப பிடிக்கும். நேரம் காலம் இல்லாமல், கையில் கிடைக்கும் எந்த புத்தகமாக இருந்தாலும், பின்னாடி அட்டையின் கடைசி எழுத்து வரை படிக்காமல் கீழே வைத்தால் பிரளயம் வந்து விடாதா என்ன??

எங்கள் அப்பா எங்களுக்கு புத்தக்ங்கள் வாங்கி கொடுத்தே ஏழை ஆகி விட்டதாக சீன் போட்டுக் கொண்டு இருக்கவும், அதே நேரம் யாமினியின் அம்மா டி.நகரில் உள்ள ரவிராஜ் லென்டிங் லைப்ரரியில் மெம்பர் ஆனதும், கடவுளின் கருணைப் பார்வைதான் என்று நினைக்கிறேன், அவர்கள் புத்தகம் எடுத்தார்களோ இல்லையோ, நாங்கள் தான் நிறைய எடுத்து இருப்போம்.

நார்த் உஸ்மான் சாலையில், ஒரு பழைய கட்டிடத்தில், வீரராகவன் நெய் கடைக்கு பக்கத்தில் இருக்கும், ரவிராஜ் லைப்ரரி. கீழே இடம் பத்தாம்ல் மேலே ஒரு இடமும் எடுத்து, ரொம்ப பேர் எடுக்காத பழைய புத்தகங்களை அங்கே வைத்து இருப்பார்கள். முக்கியமான புத்தகங்கள் கீழே இருக்கும்.

எங்கள் மூன்று பேர் தலை தெரிந்தாலே, ரவிராஜ் - அவர் தான் ஓனர், தலைமேல் கை வைத்து விடுவார். ஒரு அரைமணி நேரம், அனைத்து புத்தகங்களிலும், 10 பக்கத்தை படித்து விட்டு, (இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் புத்த்கத்தையே படித்து விடுவோம்...) நான்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு, அவர் மேஜைக்கு வந்து entry போடுவோம்.

ரங்கநாதன் தெருவில் அமர்ந்து காய் வியாபரம் செய்யும் காய்காரியை விட அதிகமாக பேரம் பேசுவோம். அவர் ஒரு புத்தகத்திற்கு 3 ரூபாய் சொன்னால், ஐம்பது பைசாவிற்க்கு அரை மணி நேரம் பேசுவோம். அடுத்த நாளே கொண்டு வந்து ரிடர்ன் செய்வதாக சத்தியம் செய்வோம். இப்போது நாங்கள் எடுக்கா விட்டால், இந்த புத்தக்ங்கள் shelf ல் தூங்கதானே போகின்றன, ஐம்பது பைசா பார்க்காதீர்கள், என்று எங்கள் சொல்வன்மையால் சுழற்றி சுழற்றி அடிப்போம். மூன்று வாயாடிகள் எங்கே அவர் ஒருவர் எங்கே, நாட்கள் செல்ல செல்ல நாங்கள் வைப்பது தான் விலை என்று ஆகிவிட்டது.

இதற்கு நடுவில் ஹேமாவிற்கு விடுமுறை நாட்களுக்கு வேலை செய்ய ரவிராஜ் அவர்களே அங்கு வந்து வேலை செய்ய கேட்டார். மாடியில் உள்ள புத்தகங்களை அடுக்க வேண்டும் மற்றும் அங்கே, இருந்து வாடிக்கையாளர்கள் எடுக்கும் புத்தகங்களுக்கு சீட்டு எழுதி கீழே கொடுத்து அனுப்ப வேண்டும். ஒரு மாததிற்கு 500 ரூபாய் சம்பளம், தினம் ஒரு புத்தகம் எடுத்து செல்லலாம் படிப்பதற்கு. கரும்பு தின்ன கூலியா என்று என் அக்காவும் அங்கே பணி புரிய ஆரம்பித்தார்.

நாங்கள் படித்திருந்த நல்ல புத்தகங்கள் எங்களுக்கு வேண்டும் என்று யோசித்தோம். காசு கொடுத்து வாங்கும் அளவிற்க்கு அப்போது இல்லை என்பதால், அதுவும் ரவிராஜ் தேவைக்கு அதிகமான புத்தகங்கள், அதுவும் எங்களுக்கு பிரியமான பல புத்தகங்கள் வைத்து இருப்பதாக தோன்றியதால், அவரிடமிருந்து கொஞ்சம் "எடுத்துக் கொள்ளுவது" தப்பில்லை என்ற முடிவிற்கு வந்தோம்.

அதன் படி ஒரு யோசனை செய்தோம், முந்தைய நாளே, எங்களுக்கு பிடித்த புத்தகங்களை எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு இடத்தில் ஒளித்து வைப்பது, லைப்ரரி செல்வது என்றால் எலாஸ்டிக் வைத்த மிடி அல்லது சுடிதார் அணிந்து செல்வது, வேலையை மூன்றாக பிரித்து கொள்ளுவது - ஒருவர் நிஜமாக புத்த்கத்தை தேடுவது, ஒருவர் கல்லாவில் யார் உக்கார்ந்து இருக்கிறார்களோ அவரிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திருப்புவது, மற்ற ஒருவர் பதுக்கி வைத்திருக்கும் இடத்தில் இருந்து புத்தகத்தை நைசாக எடுத்து, யாரும் பார்க்காத நேரத்தில், வயிற்றிக்கும் மிடிக்கும் நடுவில் வைத்து விடுவது, ஐஸ்வர்யா ராயிற்க்கு போட்டியாக வயிற்றை flat ஆக்கி, புத்தகம் உள்ளே இருப்பது தெரியாமல் மறைத்து வெளியே வருவது. வேலை ஆகிவிட்டது என்று தெரிந்ததும், அனைவரும் ஒரு இடத்திற்கு வந்து அன்று மட்டும் பேரம் கம்மியாக பேசி அவர் அதிர்ச்சியில் வாயடைத்து போயிருக்கும் போதே சைக்கிளை மிதித்துக் கொண்டு எஸ்கேப் ஆகி விடுவது, அடுத்த தெருவில் நுழைந்து புத்தகத்தை எடுத்து பையில் போட்டுக்கொண்டு எப்போதும் போல வீட்டுக்கு வந்து விடுவது.

மாடியில் இருக்கும் புத்தக்கங்களை சுடுவது மிகவும் சுலபம், ஒன்று அங்கே எங்கள் அக்கா உட்கார்ந்து இருப்பார், இல்லை ஒரு தாததா இருப்பார். அவருக்கு கண்ணும் தெரியாது, எந்த் சாமர்த்தியமும் பத்தாது, கீழே ஓனரையே ஏய்ப்பவர்களுக்கு இவர் ஜுஜுபி... ஆகையால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணுமுமாக எங்கள் வீட்டு லைப்ரரியும் வளர்ந்து வந்தது, நிறைய மில்ஸ் அண்ட் பூன்ஸ், கொஞ்சம் தமிழ் புத்தகங்கள், மற்றும் பழைய தொடர்கதைகளின் பைன்டட் வெர்ஷன் என புத்தங்கள் ஒரு 30 சேர்ந்து இருக்கும் என நினைக்கிறேன்.

ஒருநாள் எங்கள் வழக்க பிரஹாரம் மாடியில் தாத்தாதானே என்ற அலட்சியத்தில் கொஞ்சம் கவனக்குறைவாக புத்தகத்தை எடுத்து சொருகும் போது, பொடிப்பையன் ஒருவன் பார்த்து விட்டான் என்று நினைக்கிறேன்... நாங்கள் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தாத்தாவிடம் ப்ளேடு போட்டு விட்டு, கிழே இறங்கி சென்றால், ஓனர், ஒரு மார்க்கமாக் நின்று கொண்டு இருந்தார். உள்ளுக்குள்ளே அலாரம் அடிக்க,
அவர் பேச ஆரம்பிப்பதற்க்குள், இன்றக்கு எங்களுக்கு புத்த்கம் எதுவும் வேண்டாம், நாளைக்கு பரிட்சை இருக்கிறது என்று வாயிற்க்கு வந்த காரணத்தை சொல்லி, கையில் இருந்த புத்தகத்தை அவருடைய டேபிளில் போட்டுவிட்டு எடுத்தோம் ஓட்டம். அன்றக்குப் பார்த்து என் மடியில் கனம், அவரோ கடைக்கு வெளியே ஒடி வந்து, எங்களை கூப்பிடுகிறார், யாரையோ அவர் கூப்பிடுகின்ற பாவனையில் பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாப்பிற்கு ஓடுவது போல மூவரும் ஓடினோம். சாலையில் போய்க்கொண்டு இருந்தவர்கள், கடை வைத்து கொண்டு இருந்தவர்கள், "பாருங்கம்மா உங்களைத்தான் கூப்பிடுகிறாங்க" என்று எடுத்துக் கொடுக்க, "யோவ், உனக்கு வேண்டுமென்றால் நீ போய் என்ன என்று கேட்டுக்கோ, எங்களை ஆளை விடு" என்று மூச்சிரைக்க ஓடிப்போய், அவர் கண்ணிலிருந்து மறைந்த்தும், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று நினைத்துக் கொண்டு, விழுந்து விழுந்து சிரித்தோம்.

அத்தோடு நாங்கள் ரவிராஜ் லென்டிங் லைப்ரரி பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை என்று சொல்லவும் வேண்டுமா. ரொம்ப நாளைக்கு நார்த் உஸ்மான் ரோடு பக்கம் போகவில்லை, போனாலும், சைக்கிளை வேகமாக மிதித்து ஓடியே போய்விடுவோம்.

எங்கள் வீட்டிலும் யாமினி வீட்டிலும், "என்னடி லைப்ரரியே பழியா கிடப்பீங்களே, என்ன ஆச்சு" என்று கேட்டனர். "இல்லமா அங்கே இருக்கற புத்தகங்களை எல்லாம் படிச்சு முடிச்சுட்டோம், வேற லைப்ரரி தேடிக்கிட்டு இருக்கோம். " நாங்க சொன்னதில் பின்பாதி தான் உண்மை என்பது உங்களுக்கு புரிஞ்சு இருக்குமே..

ஜெயா.

Thursday, June 21, 2007

திக் திக் திக்....

கல்யாணம் பண்ணிப் பார் வீட்டை கட்டிப் பார் என்ற பழமொழியின் அர்த்ததை பாதியை என் கல்யாணம் ஆகும் போது அனுபவபட்டு தெரிந்து கொண்டேன், அது கழிந்து மூன்று வருடம் கழிந்து, மீதியினை அனுபவித்துப் பார் என்று கடவுள் என் தலையில் எழுதி விட்டார் என்று நினைக்கிறேன்...


நாங்கள் வீடு தேடி அலைந்தது பற்றி ஒரு மெகா சீரியலே எடுக்கலாம்... ஒன்று area பிடித்தால் வீடு பிடிக்காது, வீடு பிடித்தால் area பிடிக்காது, வீடு area இரண்டுமே பிடித்தால் யானை விலை சொல்லுவார்கள், அப்படி அதுவும் சரியாக இருந்தால், உள்ளே போன உடனே ஆளையே அடித்து தூக்கும் அளவிற்க்கு வாஸ்து மோசமாக இருக்கும், அப்படி கடவுளின் அற்புதத்தால் அதுவும் பிடித்து இருந்தால், அது வீடு கட்டும் இடமாக இருக்காது, வாரக்கடைசியில் போய் relax செய்யும் ஆளில்லாத அத்துவான காடாக இருக்கும், அப்படியும் இல்லையென்றால் எனக்கு பிடித்து எனதருமை வீட்டுக்காரக்கு பிடிக்காது, அவருக்கு பிடித்து என்றால் என் கண்ணுக்கு கன்றாவியாக தெரியும்..... இது மனைக்களுக்கும் பொருந்தும்... இப்படியாக, நாங்கள் தென் சென்னை முழுவதையும் சல்லடை போட்டு சலித்து அலுத்துக் போய், நமக்கு சொந்த வீட்டு குடுப்பினை இல்லை என்பதை ஒருவாறாக ஒத்துக் கொண்டு இருக்கும் போது, மேடவாக்கத்தில் ஒரு builder கட்டிக் கொண்டு இருந்த வரிசை வீடுகளில் ஒன்று எங்களுக்காகவே காத்துக் கொண்டு இருக்கின்றது என்பதை அறிந்தோம்... பார்த்த முதல் பார்வையிலேயே எங்கள் இருவருக்கும் பிடித்து விட்டது, கட்டினால் இந்தப் பெண்ணைத்தான் கட்டுவோம் என்று சிவாஜியில் நிற்கும் ரஜினி குடும்பம் போல முனைந்து, வீட்டை வாங்கினோம்.


அடிக்கல் நாட்டுவதில் இருந்து, switch மாட்டுவது வரை ஒவ்வொரு விஷத்திலும் அதிக கவனம் எடுத்துக் கொண்டு, வெட்டியாக ஒரு நிமிடம் கூட இல்லாமல் வீட்டை பற்றியே சிந்தனை, ஷாஜஹான் கூட தாஜ்மஹால் கட்ட இவ்வளவு யோசனை செய்து இருக்க மாட்டார்... நமக்கு தான் பரோபகார சிந்தனை வேற அதிகமாச்சே, அதனால் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று, பெற்ற அனுபவங்களை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள எங்கள் அலுவலகத்தில் உள்ள internal வலைப்பதிவை உபயோகித்து, அனைவரயும் ரம்பம் போட்டுக் கொண்டு இருந்தேன். அதில் பாதி பேர், வந்து சந்தேகம் எல்லாம் கேட்க, ஒரு builder rangeக்கு பீலா விட்டு திரிவதும் பழக்கமாகி விட்டது.


அலுவலகமே எதிர்ப்பார்க்கும் விஷேஷமாக எங்கள் வீடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்து, ஆடி ஆனி மாசம் காரணமாக ஜுன் 10 அன்று என்று கிரஹபிரவேஷ நாளும் முடிவானது.


என்னடா தலைப்பிற்க்கும் பதிவிற்க்கும் ஒரு சம்பந்தம் இல்லையே என்று யோசிப்பவர்களுக்கு, இது வரை கொடுத்தது முன்னுரைதான், இப்போதுதான் பதிவே ஆரம்பிக்கின்றது என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்...


கிரஹபிரவேஷத்திற்க்கான வேலைகளை நானும் என் கணவரும் பகிர்ந்து கொள்ளும் போது tiffen எற்ப்பாடு செய்யும் வேலை எனக்கு வந்தே போதே எனக்கு சனி பிடித்தது என்று நினைக்கிறேன். பக்கதில் சேகர் ஸ்டோரில் விலை எல்லாம் விசாரித்து சரி என்று சொன்னேன். அட்வான்ஸ் வேண்டுமா என்று கேட்டதற்க்கு அவர் வேண்டாம் என்று சொல்ல்வே சரி என்று விட்டு விட்டேன். விஷேஷத்திற்கு மூன்று நாள் முன்னே நடந்த்து இது. ஞாயிறு அன்று விஷேஷம் என்பதால், சனி முழுவதும் துணிமணிகள் எடுப்பது, அழைப்பது என்று படு வேகமாக சென்றுக்கொண்டு இருந்த்து, நடு நடுவில் வெங்கட், கேட்டருக்கு போன் செய் என்று சொல்லிக்கொண்டே இருந்த்தார், எனக்கு இருந்த வேலைகளில் இப்போ செய்கிறேன் அப்போ செய்கிறேன் என்று தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. போன் நம்பர் என் பையில் வேறு இருந்த்தால் போய் தேடி எடுத்து செய்து கொள்ளலாம் என்று நினைத்து இருந்தேன் எப்படி மறந்த்தேன் என்று எனக்கே தெரிய வில்லை...


ஞாயிறு காலையில் நான்கு மணிக்கு எழுந்திற்க்கும் போது தான் ஞாபகம் வந்தது அச்சச்சோ கேட்டர்ர் விஷயம் சுத்தமாக மறந்து விட்டது என்று, சரி, போன் நம்பர் எடுத்து இப்போது செய்யலாம் என்று பார்த்தால், போன் நம்பரையை காண வில்லை. பையை கொட்டி கவிழ்க்காத குறையாக தேடினாலும் கிடைக்க வில்லை. வெங்கட்டிடம் சொன்னால் அவருக்கு பயங்கர டென்ஷன் வந்து விடும், கொன்றே போட்டு விடுவார் என்பதால், சரி நாமேதான் சமாளிக்க வேண்டும் என்று, அனைவரும் காரில் கிளம்ப நானும் என் சித்தி பெண் காமாட்சியும் டூ வீலரில் கிளம்பினோம், நேரில் சென்று பார்த்து விடலாம் என்று சென்றால், காலை 4.30 மணிக்கு அங்கே திறக்கவே இல்லை... வயிற்றுக்குள் லேசாக பட்டாம் பூச்சீ பறக்க ஆரம்பித்தது...


நான் வேறு ஆர்டர் கொடுக்கும் போது, எவ்வளவு பேர் வருவார்கள் என்று இப்போது சரியாக தெரியவில்லை, அதனால் சனிக்கிழமை போன் செய்து சொல்லுகிறேன் என்று சொல்லி இருந்தேன்... தோராயமாக 150 பேர் என்று இப்போது வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் நான் போன் செய்து confirm செய்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.


காமாட்சியோ எதற்க்கு டென்ஷனாக இருக்கின்றீர்கள், கண்டிப்பாக வந்து விடும், அட்வாண்ஸ் கொடுத்து இருக்கின்றீர்களே, பயம் தேவை இல்லை என்று கூற, அய்யோ அட்வாண்ஸ் அவர் வேண்டாம் என்று சொன்னதால், தரவில்லையே என்று நான் சொல்ல, அவளுக்கு கொஞ்சம் பயம் வந்த்து... எனக்கு தைரியம் சொல்லுவதாக அவள், மெனு எல்லாம் சொல்லி இருப்பீர்கள் இல்லையா, கண்டிப்பாக செய்து விடுவான் என்று சொல்ல, அய்யோ, பைனாப்பிள் புட்டிங் ஆ இல்லை கேசரியா என்று கேட்டதற்க்கு யோசித்து சொல்லுகிறேன் என்று வேறு சொல்லி இருந்தேன், அதையும் சொல்லவில்லையே என்று நினைவு வந்தது...


சரி எப்படியாவது வந்து சேர்வதற்க்கு அட்ரெஸாவது கொடுத்து விட்டேனா என்று பார்த்தால், அதை கொடுப்பதற்க்குதானே வெங்கட் நாளெல்லாம் நினைவு படுத்திக் கொண்டு இருந்தார், அதையும் தான் மறந்து விட்டேனே. வண்டியில் மேடவாக்கம் போய் சேர்வதற்க்குள் பயத்திலேயே பாதி உயிர் போய்விட்டது.


6.15 மணிக்கு ஹோமம் எப்படியும் 8 மணி வரை ஆகி விடும், டிபன் 8 மணிக்கு வர வில்லை என்றால், பயங்கர பிரச்சனை ஆகிவிடும், மேலும் நானும் அவரும் தான் மனையில் அமர வேண்டும், அப்படி இல்லை என்றாலும் வேறு எதாவது எற்பாடு பண்ண வழி இருக்குமே என்று எண்ணியவாறே என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.


caterer கொடுத்த பேப்பரில் பிரேமி கிச்சன் என்று பார்த்த நினைவு இருக்க, telephone directory service ல் போன் செய்து டெலிபோன் நம்பர் கேட்போம் என்று கேட்டால், அப்படி ஒரு பெயரில் எந்த ஒரு நம்பரும் இல்லை என்று தெரிந்ததும் எமதர்மராஜாவின் டார்கெட் இன்றைக்கு நாம் தான் போல என்று தெளிவாக தெரிந்தது.


அட்வாண்ஸ் கொடுக்க வில்லை, மெனு சொல்லவில்லை, அட்ரெஸ் கொடுக்க வில்லை, எத்தனை பேருக்கு என்று சொல்ல வில்லை, போன் செய்து கேட்க நம்பரும் இல்லை, என் நம்பரும் அவருக்கு கொடுக்கவிலை, மந்திர மாயாஜாலத்தில் டிபன் வந்தால் தான் உண்டு என்ற நிலைமையில், என் ஆபீஸில் பணிபுரியும் நண்பனின் வீடு சேகர் ஸ்டோரின் அருகில் இருப்பதால், அவனுக்கு போன் பண்ணி கேட்போம் என்று காலை 5 மணிக்கு போன் செய்தால், உலகின் ஒன்பதாவது அதிசயமாக அவன் line ல் கிடைக்க, உலகில் உள்ள பணிவை எல்லாம் குரலில் கொண்டு வந்து, கொஞ்சம் போய் பார்த்து, போன் நம்பர் வாங்கி தா டா என்று கேட்டுக்கொண்டேன். எப்போதும் ஆணவத்திலே ஆடும் குரல் பணிவாக இருக்கவும் அவனுக்கே நிலமையின் சீரியஸ்னெஸ் புரிந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆபீஸின் foot ball match க்குகாக சீக்கிரம் எழுந்தவன், எனக்கு பேருபகாரமாக விசாரிக்க சென்றான்.


அதற்க்குள் எத்தனை நேரம் தான் எந்த பிரச்சனையும் இல்லை என்று சமாளிப்பது, வெங்கட்டிற்க்கு தெரிந்து விட, கன்னா பின்னா என்று திட்டு மழை. சண்டை மேகங்கள் மூண்டு வர, நான் எப்படியாவது ஏற்ப்பாடு செய்து கொள்ளுகிறேன் என்று வீர சபதம் விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு, அருகில் ஏதாவது ஹோட்டலில் சொல்லலாம் என்று ஒரு இடம் தேடி கண்டுபிடித்து, பேசி, அவசர கால நடவடிக்கையாக பூரி, உப்புமா போல ஏதாவது செய்து தருகிறேன் என் வயிற்றில் பால் வார்த்தார். இம்முறை அவருடைய போன் நம்பரை மறக்காமல் வாங்கி கொண்டு வந்து சேர்ந்தேன்.


அதற்க்குள் நன்பன் கடைக்கு போய் விசாரித்து கேட்டரர் நம்பரை வாங்கி தந்தான், கைகள் நடுநடுங்க, (இண்டர்வீயூக்கு கூட இப்படி ஒரு நடுக்கம் வந்தது இல்லை) போன் செய்தால், எந்த ஜென்மத்து புண்ணியமோ, அவர் பயங்கர casual ஆக, ரெடி ஆகி விட்டது மேடம், எங்கே வேளச்சேரி டெலிவெரியா என்று கேட்க, அய்யா புண்ணியவானே தயவு செய்து மேடவாக்கத்தில் கொண்டு வந்து தந்து விடு என்று சொல்லிவிட்டு ஒரு புழுப்பார்வையுடன் என் வீட்டுக்காரிடம், பாஷா ரஜினி போல, நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான், என்று வீராப்பு வசனம் பேசி மற்ற ஏற்ப்பாடுகளை செய்ய சென்றேன்.

ஹோமம் குறித்த நேரத்தில் ஆரம்பித்து நன்றாக நடந்தது, விருந்தாளிகள் வருவதற்க்குள் டிபனும் வந்து சேர்ந்தது. வந்தவர்களை விசாரித்து, வீட்டை சுற்றி கான்பித்து, சாப்பிட அழைத்து சென்று, கவனித்து அனுப்பி, மறுபடியும் வீட்டட சுத்தம் செய்து, அப்பாடா வீட்டையும் கட்டிப்பார்த்துவிட்டோமடா சாமி, என்று பெருமூச்சு விட்டோம்.

ஜெயா.