Sunday, December 24, 2006

முதல் கச்சேரி அனுபவம்....

ஐயோ.. தலைப்பைப் பார்த்து இது நான் கச்சேரியில் பாடிய முதல் அனுபவமோ என்று தவறாக எண்ணி விடாதீர்க்ள். இந்த மார்கழி மாத கச்சேரியில் நாங்கள் சென்ற முதல் கச்சேரியின் அனுபவம் தான் இந்த பதிவு.

நானும், என் officeல் என்னுடன் பணி புரியும் சுகந்தியும் சேர்ந்து வாணி மஹாலில் நடக்கின்ற திரு. ஜேசுதாஸ் கச்சேரிக்கு செல்லாம் என்று முடிவு செய்தோம்... வண்டி பார்க் செய்யவே இடம் இல்லாத போது தான் தெரிந்தது, நாம் எதிர்ப்பார்த்ததை விட கூட்டம் நிறையவே இருந்தது என்றும், நாங்கள் முன்பதிவு ஏதும் செய்யாமல் மகாராணிகளை போல் இறங்கி இருக்கின்றோம் என்று. எங்கள் முன்னாடி நின்ற காரில் இருந்து பட்டு புடவைகளும், ஜொலிக்கும் வைர கம்மல்களுடன், தலை நிறைய பூவுமாக இறங்கிய மாமிகளை பார்த்து, ஒரு நிமிடம் கச்சேரிக்கு வந்தோமா இல்லை கல்யாணத்திற்க்கு வ்ந்தோமா என்று சந்தேகம் வந்தது நிஜம்...

சரி வந்தோம், உள்ளே சென்று கேட்டு விடுவோம் என்று போனால், டிக்கெட் கொடுக்கும் இடம் கண்ணில் படவே இல்லை, அப்பொதாவது எங்கள் மரமண்டைகளுக்கு புரிய வேண்டாமா, ஒரு முறை சபாவையே சுற்றி விட்டு, அருகில் நின்றிருந்தவரை கேட்கும் போது, அவர் எங்களை ஒரு அற்ப புழுவைபோல் பார்த்து, டிக்கெட் எல்லாம் sold out என்றார்.

சே, ஜேசுதாஸ்க்கு எங்கள் முன்னால் பாடும் குடுப்பினை இல்லாமல் போய்விட்ட்தே என்று புலம்பலோடு அடுத்த இடத்திலேயாவது try பண்ணுவோம் என்று நாரதகான சபாவிற்க்கு படை எடுத்தோம். அங்கே அடுத்த நாள் அருணா சாய்ராம் அவர்களின் கச்சேரிக்கு டிக்கெட் கிடைக்கிறதா என்று பார்த்தால் அங்கேயும் housefull board! அடடா என்னடா இது, நாட்ல ஒரு கச்சேரி கேட்கிறது இவ்வளவு கஷ்டமா இருக்கே என்று நினைத்துக் கொண்டு கஜினி முகமது கணக்காக mylapore fine arts க்கு சென்றோம்.

அங்கே, T.V. Sankara narayanan அவர்கள் கச்சேரி நடந்து கொண்டு இருந்தது, எங்கள் அதிர்ஷ்டம், டிக்கெட் இருந்தது, அப்படியே, மறுநாள் பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் கச்சேரிக்கும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். கொஞ்சம் வயதானவர், புன்னகை புரியும் முகம், நல்ல சாரிரம், எத்தனையோ கச்சேரி மேடைகளை கடந்து வந்தவர் என்று பார்த்தாலே தெரியும் படிக்கு அநாயாசமாக பாடிக் கொண்டு இருந்தார்.

கொஞ்சம் தமிழ் பாடல்கள், நடுவில் தெலுங்கு, இடையில் ஆலாபனைகள் என்று மனிதர் வெளுத்து வாங்கி கொண்டு இருந்தார். முதல் பத்து நிமிடம் அவரை விட்டு கண்களை எடுக்க முடியாமல் கேட்டு கொண்டு இருந்த நாங்கள் மெதுவாக அக்கம் பக்கம் பார்வையை செலுத்தினோம்...

பக்கத்தில் இருந்த மாமி, கையில் கச்சேரி டைஜ்ஸ்ட் என்ற பத்திரிக்கையும், காதில் பாட்டுமாக இரு வேலைகள் செய்து கொண்டு இருந்தார். அந்த பக்கம் ஒரு மாமா ஆனந்த விகடனை அடுத்த நாள் பரிட்சைக்கு படிப்பவர் போல படித்து கொண்டு இருந்தார். கச்சேரியை ரசித்து கேட்டு கொண்டு இருந்தவர்களும் இருந்தார்கள்... அங்கே இருந்த அனைத்து மாமிகளும் ஒன்று பட்டிருந்த விஷயம் என்ன என்றால் - வைரக் கம்மல். அதிலும் ஒரு சிலர் போட்டுக் கிட்டு இருந்த கம்மல்களில் இருந்து கண்களை எடுக்க முடியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருந்தோம்.


ஒரு மணி நேரம் கழித்து பார்த்தால், கொஞ்சம் பேர் எழுந்து வெளியே சென்று கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர், என்ன விஷயம் என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை... ஆகவே கச்சேரியை ரசித்து கொண்டு இருந்தோம், ஆனால் கச்சேரி முடிகின்ற வழியையே காணோம், நாங்களும் இதுதான் கடைசி என்று பார்த்தால் மனுஷர் அடுத்த பாடலை ஆரம்பித்து கொண்டு இருந்தார். மணி ஒன்பதை தாண்டிய பிறகு, பசி வயிற்றை கிள்ள, இதற்க்கு மேல் late ஆக போனால் வீட்டில் நல்ல மரியாதை கிடைக்கும் என்பதால், இடையில் கிளம்பினோம்.

வெளியே வந்தால் கமகம என்று மணக்கும் canteen! அடப்பாவிங்களா இதுக்கு தான் எல்லாம் அடிக்கடி escape ஆகிட்டிகளா! நமக்கு தெரியாம போச்சே என்று சாப்பிட உக்காந்தா, மல்லிகை பூ போல இட்லி, நல்ல ஐயர் வீட்டு சாம்பார், நெய் சொட்டும் பொங்கல், முருகல் தோசை என்று ஓரு வெட்டு வெட்டிட்டு, நடக்க முடியாம நடந்து, வண்டிய எடுத்துக் கிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டில் வந்து நாங்க கச்சேரியை பத்தி பேசினதை விட வைரக்கம்மல் பத்தி பேசினது தான் நிறைய என்று எல்லோரும் பேசிக்கறாங்க.. நான் எங்க வீட்டுகாரர் கிட்ட புலம்பினதை கேட்ட எங்க வீட்டு வேலைகார பெண், அண்ணா அக்கா ரொம்ப ஆசை படறாங்க ஒன்னு வாங்கி கொடுத்துங்க என்று recommend பன்ற நிலமை ஆகிடுச்சு என்றால் பார்த்துக்கோங்க...

ஆக மொத்தம் நாங்க தெரிஞ்சுகிட்டது என்ற என்றால், இது ஒரு தனி உலகம்... தினம் ஒரு பாடகர், வெவ்வேறு பாடல்கள், ஒரு நாளைக்கு நான்கைந்து கச்சேரிகளை ஒவ்வொரு சபாக்களில் கேட்டு அலசி விமர்சனங்கள் என்று வருஷத்தில் இந்த மார்கழி மாதத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள் பலர்... பிள்ளைகள் அமெரிக்கா, லண்டன் என்று செட்டில் ஆகி விட இங்கே இருக்கும் பெரியவர்களுக்கும் இது ஒரு நல்ல relaxation, கச்சேரிக்கு வந்திருந்தவர்கள் 95% நாற்பது வயதை தாண்டியவர்கள் என்பது இதற்க்கு சான்று.

எது எப்படியோ, எனது ரொம்ப நாளைய கச்சேரி கேட்கும் ஆசை நிறைவேறியது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது....

ஜெயா.

No comments: