Thursday, February 15, 2007

கலாசாரங்கள்??

நேற்று எங்கள் அலுவலகத்தில் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், சாயங்காலம், "When Harry meets Sally" என்ற ஆங்கில படத்தை திரையிட்டனர். அலுவல்கத்திற்க்கும் காதலர் தினத்திற்க்கும் ஆங்கில படத்திற்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர் தலையில் இடி விழ...

எனக்கும் ஆங்கில படத்திற்க்கும் இடைவெளி ரொம்பவே அதிகம், நான் பார்த்த இங்கிலிஸு படங்கள் - Baby's Day Out, Titanic மட்டும் தான் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

படம் ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து சென்றாலும், படத்தின் கதை புரிந்தது. கதாநாயகி அநியாயத்திற்கு அழகாக இருந்தாள், ஒரு ஒப்பனையும் இல்லாமல், சின்ன சிரிப்பு சிரிக்கும் போது கூட பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருந்தது. இருவரும் ஓயாமல் dialogue பேசிக் கொண்டே இருந்தனர், sound system கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்ததால், நாங்களே அர்த்ததை guess செய்து கொண்டோம்.

படம் பார்க்கும் போதே என் எண்ண ஓட்டங்கள், அவர்கள் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தை பற்றியும் நம்மூர் நிலைமைகளையும் ஒப்பிட்டுக் கொண்டு இருந்த்து. கதாநாயகி என்ன என்றால், தன்னுடைய ஆண் நண்பர்களையும் பற்றியும் அவர்களுடன் அவளுடைய உறவுகளையும் பற்றி பெருமை பீற்ற, நாயகனோ, இவள் அவனுடைய காதலியுடைய தோழியாக இருந்தும், இவளுடன் உறவாட ஆசை கொள்வதாகவும், இவன் பங்கிற்கு இவர் பிரதாபங்களை அவிழ்த்து விடுவதாகவும் .... அடடடா dialogue கை கேட்பதற்க்கே காதுகள் கோடி வேண்டும்.

நடு நடுவே, வயதான தம்பதியர் அவர்களின் காதல் மற்றும் கல்யாண அனுபவங்களை பகிர்ந்து கொள்வதாக இருந்த்து, அவர்களுடைய கலாசாரத்தில் வேண்டுமென்றால் இது புதுமையான விஷயமாக இருக்குமே தவிர, நம்மூரில் சதாபிஷேகம் மற்றும் எள்ளு பேத்திகளை கண்டும் ஒற்றுமையாக வாழும் தம்பதியரை காண்பது சகஜமான ஒன்று.

இங்கானால், பெண்கள் ஆண்களுடன் பேசினாலோ, சேர்ந்து சினிமாவிற்கு போவதாலோ, குணமே கெட்டுவிட்டதாகவும் , சாதாரன நட்பைக் கூட சந்தேக கண்களோடு பார்க்கும் அக்கம் பக்கம் ஒருபுறம். திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், அடுத்தவரிடம் சொல்ல பயந்து திருமணத்திற்கு முந்தைய காதலை மனசுக்குள் ஒரு சுமையாக சுமக்கும் ஆண்களும் பெண்கள் ஒரு புறம். கல்யாணத்திற்கு பிறகும் மனைவியோ கணவனோ மற்றவரிடம் பேசுவதை சந்தேக கண்ணோடு பார்த்து தங்கள் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்ளும் கணவன் மனைவிகள் ஒரு புறம்...

இந்த கஷ்டங்களை பார்க்கும் போது, பேசாமல் அவர்களை போலவே வெளிப்படையாக பேசியும் நடந்தும் பிரச்சனைகளை குறைத்துக் கொள்வதே நலமோ என்று தோன்றியது. எத்தனை காலம் ஆனாலும், நம்மால் நம்முடைய ஒருவனுக்கு ஒருத்தி மற்றும் திருமண பந்தங்களை விட்டுக் கொடுக்க முடியாது என்று தோன்றினாலும், எல்லா விஷயத்திலும் வெளிநாட்டை பின்பற்றுகின்ற மோகம் எங்கே கொண்டு போய் விடுமோ என்ற பயமும் இருக்கின்றது...

படம் முடியுமுன் கிளம்ப வேண்டியதாகி விட்டதால் கிளைமேக்ஸ் பார்க்க முடியவில்லை, தனியாக எடுத்துதான் மீதி படத்தை பார்க்க வேண்டும், ச்சீ அலுவலகத்தில் மற்றவர்களோடு சேர்ந்து பார்க்க முடியாததால என்று நீங்க நினைச்சீங்களா என்ன??

ஜெயா.

No comments: