Tuesday, January 23, 2007

வளரும் வால் (சு)குட்டிகள்

எங்கள் குழந்தை அகில், ஒன்றரை வயது ஆகும் வாலில்லாத குறும்பு குரங்கு. இன்னும் பேச்சு வரவில்லை என்றாலும், சத்தங்களிலேயே தேவையானதை சாதித்துக் கொள்ளும் திறமை ரொம்பவே நிறைய. அதிலும் பிடிவாதம் அதிகம். கேட்டதை கொடுக்காவிடில், கையில் இருப்பதை தூக்கி விசிறி எறிந்து, அதுவும் சரியாக விழாவிடில் திரும்ப தூக்கி எறியும் அளவிற்கு தெளிவான சுட்டி.

நேற்று சாயங்காலம், எதோ ஒரு பொருளை எடுத்து தரும்படி, என் கை பிடித்து இழுத்து சென்றான். என்ன என்று பார்த்தால் fevicol டப்பா. சரி எடுத்து தந்தால், திறந்து தரும் படி அடம் பிடித்தான். பேச சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நானும், அம்மா என்று சொல்லு, திறந்து தருகின்றேன் என்று சொன்னேன். சொல்லாமல் பழைய படியே சத்தங்கள் கொடுத்து கொண்டு இருந்தான்... நானும் பிடிவாதமாக திறந்து தராமல் இருந்தேன்.

அடுத்த நிமிஷம், எம்பி என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, இப்போது திறந்து தா, என்பது போல் ஒரு பார்வை பார்த்திருந்தான். ஒரு நிமிஷம் எனக்கு ஒன்றும் புரியவில்லை, பின்னர் சிரிப்புதான் வந்தது. எவ்வளவு தான் யோசித்தாலும், இதை எங்கிருந்து கற்று கொண்டு இருப்பான் என்று தெரியவில்லை...

சிறு குழந்தைகளின் புத்திசாலித்தனம், அவர்களின் சுறுசுறுப்பு, கவனிக்கும் திறன், இவற்றை எல்லாம், அதுவும் முக்கியமாக இந்த கால குழந்தைகளின் திறமைகளை எழுத்தில் அடக்க முடியாது. ஆனால் தினமும் முன்னேறிக்கொண்டு இருக்கும் இந்த உலகத்தில் வாழ்ந்து வெற்றி பெற வேண்டுமெனில் கண்டிப்பாக இவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

ஜெயா.