Thursday, February 15, 2007

கலாசாரங்கள்??

நேற்று எங்கள் அலுவலகத்தில் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், சாயங்காலம், "When Harry meets Sally" என்ற ஆங்கில படத்தை திரையிட்டனர். அலுவல்கத்திற்க்கும் காதலர் தினத்திற்க்கும் ஆங்கில படத்திற்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர் தலையில் இடி விழ...

எனக்கும் ஆங்கில படத்திற்க்கும் இடைவெளி ரொம்பவே அதிகம், நான் பார்த்த இங்கிலிஸு படங்கள் - Baby's Day Out, Titanic மட்டும் தான் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

படம் ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து சென்றாலும், படத்தின் கதை புரிந்தது. கதாநாயகி அநியாயத்திற்கு அழகாக இருந்தாள், ஒரு ஒப்பனையும் இல்லாமல், சின்ன சிரிப்பு சிரிக்கும் போது கூட பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருந்தது. இருவரும் ஓயாமல் dialogue பேசிக் கொண்டே இருந்தனர், sound system கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்ததால், நாங்களே அர்த்ததை guess செய்து கொண்டோம்.

படம் பார்க்கும் போதே என் எண்ண ஓட்டங்கள், அவர்கள் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தை பற்றியும் நம்மூர் நிலைமைகளையும் ஒப்பிட்டுக் கொண்டு இருந்த்து. கதாநாயகி என்ன என்றால், தன்னுடைய ஆண் நண்பர்களையும் பற்றியும் அவர்களுடன் அவளுடைய உறவுகளையும் பற்றி பெருமை பீற்ற, நாயகனோ, இவள் அவனுடைய காதலியுடைய தோழியாக இருந்தும், இவளுடன் உறவாட ஆசை கொள்வதாகவும், இவன் பங்கிற்கு இவர் பிரதாபங்களை அவிழ்த்து விடுவதாகவும் .... அடடடா dialogue கை கேட்பதற்க்கே காதுகள் கோடி வேண்டும்.

நடு நடுவே, வயதான தம்பதியர் அவர்களின் காதல் மற்றும் கல்யாண அனுபவங்களை பகிர்ந்து கொள்வதாக இருந்த்து, அவர்களுடைய கலாசாரத்தில் வேண்டுமென்றால் இது புதுமையான விஷயமாக இருக்குமே தவிர, நம்மூரில் சதாபிஷேகம் மற்றும் எள்ளு பேத்திகளை கண்டும் ஒற்றுமையாக வாழும் தம்பதியரை காண்பது சகஜமான ஒன்று.

இங்கானால், பெண்கள் ஆண்களுடன் பேசினாலோ, சேர்ந்து சினிமாவிற்கு போவதாலோ, குணமே கெட்டுவிட்டதாகவும் , சாதாரன நட்பைக் கூட சந்தேக கண்களோடு பார்க்கும் அக்கம் பக்கம் ஒருபுறம். திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், அடுத்தவரிடம் சொல்ல பயந்து திருமணத்திற்கு முந்தைய காதலை மனசுக்குள் ஒரு சுமையாக சுமக்கும் ஆண்களும் பெண்கள் ஒரு புறம். கல்யாணத்திற்கு பிறகும் மனைவியோ கணவனோ மற்றவரிடம் பேசுவதை சந்தேக கண்ணோடு பார்த்து தங்கள் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்ளும் கணவன் மனைவிகள் ஒரு புறம்...

இந்த கஷ்டங்களை பார்க்கும் போது, பேசாமல் அவர்களை போலவே வெளிப்படையாக பேசியும் நடந்தும் பிரச்சனைகளை குறைத்துக் கொள்வதே நலமோ என்று தோன்றியது. எத்தனை காலம் ஆனாலும், நம்மால் நம்முடைய ஒருவனுக்கு ஒருத்தி மற்றும் திருமண பந்தங்களை விட்டுக் கொடுக்க முடியாது என்று தோன்றினாலும், எல்லா விஷயத்திலும் வெளிநாட்டை பின்பற்றுகின்ற மோகம் எங்கே கொண்டு போய் விடுமோ என்ற பயமும் இருக்கின்றது...

படம் முடியுமுன் கிளம்ப வேண்டியதாகி விட்டதால் கிளைமேக்ஸ் பார்க்க முடியவில்லை, தனியாக எடுத்துதான் மீதி படத்தை பார்க்க வேண்டும், ச்சீ அலுவலகத்தில் மற்றவர்களோடு சேர்ந்து பார்க்க முடியாததால என்று நீங்க நினைச்சீங்களா என்ன??

ஜெயா.

Tuesday, February 13, 2007

இப்படி எல்லாம் இருந்தால்....

இப்படி எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும்??

1. மூக்கு பிடிக்க ஒரு அறுசுவை விருந்து ஒரு வேளை சாப்பிட்டால் அடுத்த இரு நாட்களுக்கு பசிக்காத வயிறு....
2. ஒரு நாள் சமைத்த உணவு கெடாமல் எல்லா நாளும் வளர்ந்து வரும் பாத்திரங்கள்...
3. ஒரு முறை fill செய்தால் தீரவே தீராத பெட்ரோல் டேங்க் கொண்ட கார்...
4. ஒரு முறை மாற்றினால் வாழ்நாள் முழுவதும் வரக்கூடிய சமையல் காஸ்...
5. முதல் மாத வாடகைக்கு அப்புறமாக வாடகையே கேட்காத வீட்டு சொந்தகாரர்...
6. எத்தனை முறை அணிந்தாலும் புது கருக்கு மாறாத ஆடைகள்...
7. செய்த தவறை திரும்ப சென்று திருத்திக் கொள்ளக்கூடிய கால கடிகாரம்...
8. அயல் நாட்டில் இருக்கும் ஆருயிர் தோழியை நினைத்த உடனே சென்று சந்திக்க கூடிய தனி போக்குவரத்து சாதனம்...
9. அனைத்தை விட முக்கியமாக, வீட்டின் பின்புறத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை காய்க்கும் ஒரு பணம் காயச்சி மரம்....

ஆசைகளுக்கு ஏது அணை??


ஜெயா.

Friday, February 9, 2007

பெண்கள் அன்றும் இன்றும்...

எனக்கு தெரிந்து நமக்கு முந்தைய தலைமுறையில் பெண்கள் சந்தோஷமாக வாழ்ந்தனரா என்று கேட்டால், பதில் இல்லை என்று தான் சொல்லுவேன். எங்கள் அம்மா அப்பா முதல் எனக்கு தெரிந்த சொந்தகாரர் வட்ட்த்தில் கூட கல்யாணம் செய்து கொண்டு நிறைவுடன் வாழ்ந்தவர்கள் ரொம்ப குறைச்சல். அதற்க்கென்று, தினம் தினம் அடி வாங்கி வறுமையில் கஷ்டப்பட்டனர் என்பது இல்லையென்றாலும், நினைத்ததை சொல்வதற்க்கும், தன் உரிமைகளை நிலை நாட்டுவதற்க்கும் அவர்களுக்கு சுதந்திரம் இல்லாமல் இருந்தனர் என்பதே உண்மை. கணவனும் மனைவியும் பரஸ்பரம் புரிந்து ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்தல் என்பது, பல இல்லங்களில் கனவாகத்தான் இருந்த்து.

கணவர் இல்லாத போது மனைவி பக்கத்து வீட்டுகார அம்மாவிடம் தன் கதையை புலம்புவதும், அவரை திட்டி பேசுவதும், சொந்த்ங்கள் சேரும் போது, அவரை பற்றி புலம்புதலும், "என் பேச்சை கேட்டிருந்தா அவர் எப்போ உருப்பட்டு இருந்திருப்பாரே" என்ற குறைகளும் மிக சகஜம். இதற்கு விதிவிலக்காக இருந்தவர்களும் இருக்கலாம், ஆனால் பெருன்பான்மையான பெண்கள் மாமியார், நாத்தனார், மற்றும் கணவன் கொடுமைகளால் பாதிக்க பட்டிருந்தனர். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், என் க்ளாஸில் இருந்த 40 பேர்களில் 10 பேரின் அம்மாக்கள் வேலை பார்ப்பனவராக இருந்தனர், மீதம் அனைவரும் வீட்டில் இருந்ததனால், வீட்டில் இருப்பவரின் தேவைகளை பார்த்துக் கொண்டு தன்னை பற்றியும் தன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டு இருந்தனர்.

ஆனால் இன்றைக்கு நிலைமை ரொம்பவே மாறி விட்டது. அப்போது என் அம்மா என் அப்பா திட்டியபோது பதில் பேசாமல் இருந்த நிலைமை மாறி, என் கணவர் என்னை விமர்சிக்கும் போது பதில் பேசி கருத்துக்களை புரிய வைக்கும் சுகந்திரம் கிடைத்து இருக்கின்றது. ஆண்கள் தவறு செய்யாதவர்கள் என்ற நிலைமை மாறி, பெண்கள் கருத்திலும் நியாயம் இருக்கின்றது என்ற எண்ணம் பரவலாகி இருக்கின்றது. காரணமாக பலவற்றை சொல்லலாம், ஆணுக்கு நிகராக பெண்கள் குடும்ப பாரத்தை சுமப்பது, முந்தைய நாட்களை விட விழிப்புணர்வு அதிகமாகி இருப்பது, பெண்கள் கல்வி, ஆண்களுடைய கருத்து மாற்றம் என பல. இருக்கும் சுதந்திரத்தை அளவிற்கு மீறி எடுத்துக் கொண்டு தன் வாழ்வையும் தன் குடும்பத்தினரின் வாழ்க்கையும் கஷ்டப்படுத்திக் கொள்ளுகின்ற பெண்களை என்ன என்று சொல்லுவது. போதிய முதிர்ச்சியின்றி பிரச்சனைகளை அனுகுவதாலும், தகுந்த வழி காட்டுதல் இல்லாமலும் இல்லறங்கள் சிதறி போவது மனதிற்கு வேதனை தரும் விஷயமே.

ஆனாலும் தவறு செய்யும் சிலரை தவிர்த்து பார்த்தோமானால், நிஜமாகவே இந்த மாற்றம் வரவேற்க்க தக்கதே. பெண் என்றால் அடுக்களை வேலைகளை பார்த்துக் கொண்டும், பிள்ளைகளை பெற்று பேணிக்காக்க வேண்டியவள் என்ற கருத்து மாறி இருப்பதே இன்றைய பெண்கள் நிம்மதியாக மூச்சு விடக்கூடிய சூழலுக்கு காரணம்.

ஜெயா.

Tuesday, February 6, 2007

கல்யாணமாம் கல்யாணம்...

போன வாரம் சொந்தகார பெண் ஒருவரின் கல்யாணத்திற்க்காக கும்பகோணம் சென்றோம். கல்யாணம், ஒரு கிராமத்தில் என்பதால், சத்திரம் முதல் சாப்பாடு வரை கிராமிய மணம், வசதிகள் குறைவு, மக்கள் கூட்டமோ அதிகம். அதில் வேறு கல்யாண மாப்பிள்ளையின் வேண்டுதலுக்காக தாலி கட்டும் வைபவம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கோவிலில் வைப்பதாக முடிவு. ஆகவே தாலி கட்டுவதற்க்கு முன் செய்கின்ற சாங்கியம் அனைத்தும் சத்திரத்தில் செய்து முடித்ததும், எற்ப்பாடு செய்திருந்த வேன் மூலம் மணப்பெண், மாப்பிள்ளை மற்றும் முக்கிய உறவினர்கள் இரண்டு ட்ரிப்பாக கல்யாண மண்டபத்திலிருந்து கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். நானும் என் கணவரும் வேனிலிருந்து தப்பித்து மற்றொரு உறவினரின் வண்டியில் ஏறி கோவிலுக்கு சென்றோம்.

அங்கே மாப்பிள்ளையும் பெண்ணும் தயாராக இருக்க, ஐயர் தாலியை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுக்க, மாப்பிள்ளையும் கெட்டி மேளம் முழங்க கட்டினார். அடுத்த நிமிடம் முன்னாடி நின்று இருந்த பாட்டி ஒருவர், தாலியை பிரட்டி கட்டிடாங்க, அப்படி கட்டவே கூடாது, என்று பிரச்சனை எழுப்ப, அருகில் இருந்த பலர் ஆமோதிக்க, சந்தோழ சூழல் மாறி, பதட்டம் குடிகொண்டது. கழற்றி கட்ட வேண்டும என்று ஒரு தரப்பும், கட்டின தாலியை கழட்டலாமோ என்று இன்னோரு தரப்பும் கருத்துக்களை அள்ளி வீச ஆரம்பிக்க, மாப்பிள்ளைக்கு வியர்க்க ஆரம்பித்தது. தவறுதலாக தாலியை கொடுத்த ஐயருக்கும் நல்ல திட்டு.

கடைசியில் கழற்றி கட்ட வேண்டும் என்ற கட்சி ஜெயிக்க, மாப்பிள்ளை கட்டிய தாலியை கழற்ற ஆரம்பித்தார்... கிடைத்தடா வாய்ப்பு என்ற எண்ணத்தில் கெட்டியாக போட்ட முடிச்சுகள் அவிழ்வேனா என்று முரண்டு பிடிக்க, மாப்பிள்ளை கழற்றியே தீர்வேன் என்று அடம் பிடிக்க, உச்ச கட்ட கிளைமேக்ஸ் ற்க்கு பிறகு, மாப்பிள்ளை திரும்ப கட்டினார். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், மணமக்களின் மனநிலை கண்டிப்பாக பாதிக்கப்பட்டுதான் இருக்கும், அதிலும் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பின் கேட்கவே வேண்டாம்.

ஆனால் கல்யாணம் என்பதே சுவையான, அன்பான, அதிர்ச்சிகரமான, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தல்லவா, அந்த பயணம் ஆரம்பிக்கும் நாளிலேயே தன் முகங்களை காண்பிக்க ஆரம்பித்தால் யாரால் என்ன செய்ய முடியும், அதன் போக்கிலேயே போவதை தவிர....

ஜெயா.