Friday, February 9, 2007

பெண்கள் அன்றும் இன்றும்...

எனக்கு தெரிந்து நமக்கு முந்தைய தலைமுறையில் பெண்கள் சந்தோஷமாக வாழ்ந்தனரா என்று கேட்டால், பதில் இல்லை என்று தான் சொல்லுவேன். எங்கள் அம்மா அப்பா முதல் எனக்கு தெரிந்த சொந்தகாரர் வட்ட்த்தில் கூட கல்யாணம் செய்து கொண்டு நிறைவுடன் வாழ்ந்தவர்கள் ரொம்ப குறைச்சல். அதற்க்கென்று, தினம் தினம் அடி வாங்கி வறுமையில் கஷ்டப்பட்டனர் என்பது இல்லையென்றாலும், நினைத்ததை சொல்வதற்க்கும், தன் உரிமைகளை நிலை நாட்டுவதற்க்கும் அவர்களுக்கு சுதந்திரம் இல்லாமல் இருந்தனர் என்பதே உண்மை. கணவனும் மனைவியும் பரஸ்பரம் புரிந்து ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்தல் என்பது, பல இல்லங்களில் கனவாகத்தான் இருந்த்து.

கணவர் இல்லாத போது மனைவி பக்கத்து வீட்டுகார அம்மாவிடம் தன் கதையை புலம்புவதும், அவரை திட்டி பேசுவதும், சொந்த்ங்கள் சேரும் போது, அவரை பற்றி புலம்புதலும், "என் பேச்சை கேட்டிருந்தா அவர் எப்போ உருப்பட்டு இருந்திருப்பாரே" என்ற குறைகளும் மிக சகஜம். இதற்கு விதிவிலக்காக இருந்தவர்களும் இருக்கலாம், ஆனால் பெருன்பான்மையான பெண்கள் மாமியார், நாத்தனார், மற்றும் கணவன் கொடுமைகளால் பாதிக்க பட்டிருந்தனர். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், என் க்ளாஸில் இருந்த 40 பேர்களில் 10 பேரின் அம்மாக்கள் வேலை பார்ப்பனவராக இருந்தனர், மீதம் அனைவரும் வீட்டில் இருந்ததனால், வீட்டில் இருப்பவரின் தேவைகளை பார்த்துக் கொண்டு தன்னை பற்றியும் தன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டு இருந்தனர்.

ஆனால் இன்றைக்கு நிலைமை ரொம்பவே மாறி விட்டது. அப்போது என் அம்மா என் அப்பா திட்டியபோது பதில் பேசாமல் இருந்த நிலைமை மாறி, என் கணவர் என்னை விமர்சிக்கும் போது பதில் பேசி கருத்துக்களை புரிய வைக்கும் சுகந்திரம் கிடைத்து இருக்கின்றது. ஆண்கள் தவறு செய்யாதவர்கள் என்ற நிலைமை மாறி, பெண்கள் கருத்திலும் நியாயம் இருக்கின்றது என்ற எண்ணம் பரவலாகி இருக்கின்றது. காரணமாக பலவற்றை சொல்லலாம், ஆணுக்கு நிகராக பெண்கள் குடும்ப பாரத்தை சுமப்பது, முந்தைய நாட்களை விட விழிப்புணர்வு அதிகமாகி இருப்பது, பெண்கள் கல்வி, ஆண்களுடைய கருத்து மாற்றம் என பல. இருக்கும் சுதந்திரத்தை அளவிற்கு மீறி எடுத்துக் கொண்டு தன் வாழ்வையும் தன் குடும்பத்தினரின் வாழ்க்கையும் கஷ்டப்படுத்திக் கொள்ளுகின்ற பெண்களை என்ன என்று சொல்லுவது. போதிய முதிர்ச்சியின்றி பிரச்சனைகளை அனுகுவதாலும், தகுந்த வழி காட்டுதல் இல்லாமலும் இல்லறங்கள் சிதறி போவது மனதிற்கு வேதனை தரும் விஷயமே.

ஆனாலும் தவறு செய்யும் சிலரை தவிர்த்து பார்த்தோமானால், நிஜமாகவே இந்த மாற்றம் வரவேற்க்க தக்கதே. பெண் என்றால் அடுக்களை வேலைகளை பார்த்துக் கொண்டும், பிள்ளைகளை பெற்று பேணிக்காக்க வேண்டியவள் என்ற கருத்து மாறி இருப்பதே இன்றைய பெண்கள் நிம்மதியாக மூச்சு விடக்கூடிய சூழலுக்கு காரணம்.

ஜெயா.

No comments: