Wednesday, July 4, 2007

சமையல்... சமையல்...

சீசனுக்கு ஒரு கிறுக்கு பிடிக்கும் எனக்கு. நீங்கள் சீசனுக்குதானா என்று கேட்பது காதில் விழுகிறது, எப்போதும் இருக்கும் கிறுக்குதனம் இல்லாமல், யாராவது ஏதாவது செய்வதைப் பார்த்தால், அல்லது ஏதாவது புத்தகதில் பார்த்தால் என புதிதின் தொடக்கம் ஏதாவது இருக்கும்..


பத்தாம் வகுப்பின் பள்ளி முடிந்து விடுமுறை காலம். என்னுடைய ஒரு நன்பனின் அம்மா மிகவும் அருமையாக சமைப்பார்கள், home science graduate. பெண் குழந்தை இல்லாத காரணத்தால் எங்களிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள். இரண்டு நாள் அவர்கள் சமையலை சாப்பிட்டவுடன், சமையல் கத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை வந்த்து. அவர்களும் ஆசையாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். சாதா சாம்பார், கூட்டு இவற்றில் என்ன இருக்கின்றது என்று எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் என்று எண்ணி முதலில் இனிப்பில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று விதம் விதமான இனிப்புகள் கற்றுக் கொண்டேன்.

குலாப் ஜாமூன் (குலாப் ஜாமூனில் என்ன இருக்கிறது கற்று கொள்ளுவதற்க்கு என்று எள்ளி நகையாடுவர்களுக்கு - பாக்கெட் ஜாமுன் இல்லை மக்களே, பாலிலிருந்து கோவா எடுத்து செய்வது...) பாசுந்தி, பால்கோவா என்று பட்டியல் நீண்டது.

சனி ஞாயிறு வந்த்தால் என் அட்டஹாசம் தாங்க முடியாது. சமைப்பது என்னவோ சமையலறையில் என்றாலும், வீடு மொத்தமே அல்லோகலப்படும்.
டி வி யில் வரும் Star hotel cheff கூட இந்த scene போட மாட்டார். கடைசியில் வரும் final product என்ன என்று நான் சொல்லித்தான் மற்றவர்களுக்கு தெரிய வரும். அதை கண்டு பிடிக்க ஒரு போட்டி பந்தியமே நடக்கும். நான் சமைக்கிறேன் என்றால் எங்கள் வீட்டு பாதி கூட்டத்திற்க்கு ஏதாவது ஒரு முக்கியமான வேலை வந்துவிடும்... அப்படியே இருந்தாலும், இருப்பவர்களுக்கு அடுத்த நாள் வயிற்று வலி வந்து விடும். இருந்தாலும், இதனாலெல்லாம் மனம் தளராமல், என் சமையல் தொடர்ந்து கொண்டு இருந்தது.... முக்கியமான சோதனை எலி என் சமையலுக்கு என் தோழி யாமினி. நான் எது செய்தாலும், மலர்ந்த முகத்துடன் சாப்பிட்டு விட்டு, ரொம்ப பிரமாதம் என்று வாய் கூசாமல் புளுகுவாள். நானே சாப்பிட தயங்கும் பண்டங்களை கூட சாப்பிட்டு விட்டு என்னையும் சாப்பிட மோட்டிவேட் செய்வாள்.


ஒரு நாள் நானும், யாமினியும் சேர்ந்து பக்கத்தில் உள்ள ஸ்ரீ பகவானின் கோவிலுக்கு பிரசாதம் செய்து எடுத்து செல்லலாம் என்று முடிவு செய்து safe game ஆக milk sweet செய்ய முடிவு செய்தோம். பெருமையாக கோவில் காரர்களுக்கு போன் பண்ணி சொல்லியும் விட்டோம். இரண்டு லிட்டர் பால் வாங்கி, வாணலியில் உற்றி, ஊர் கதைகள் பேசிக் கொண்டே மும்மரமாக கிளறிக் கொண்டு இருந்தோம். பேச்சு சுவாரசியத்தில் சரியான பதம் வருவதற்க்கு முன்னாலேயே இறக்கி விட்டோம் என்று நினைக்கிறேன்... இறக்கியவுடன் சர்க்கரையை முதலில் போட்டு, பின்னர் இரண்டு குழம்பு கரண்டி மைதா மாவினை போட்டு பீஸ் போட வேண்டியது தான் நார்மலான ரெசிபி.

ஆனால் நாங்க செய்த தவறினால், சர்க்கரை போட்டு விட்டு இரண்டு கரண்டி மைதா போட்டால் அது போன இடம் தெரியவில்லை, இரண்டு இரண்டு கரண்டியாக கால் கிலோ மைதா வினை கொட்டியும் ஒன்றும் முன்னேற்றம் இல்லை, ஒரு மாதிரி கோந்து பசை போல இருந்தது, அதை எங்கே இருந்து பீஸ் போடுவது... பின்னர் இன்னும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து, இன்னும் கொஞ்சம் மைதா போட்டு, ஒரு மாதிரி நாங்கள் முடித்த போது அது milk sweetற்க்கு தூரத்து சொந்தம் மாதிரி கூட இல்லை.

வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல், கோவிலில் வேறு பெருமை பேசியாகிற்று, பிரசாதம் கொண்டு போகவில்லை என்றால் நன்றாக இருக்காது.. ஏதாவது கடையில் வாங்கி கொண்டு கொடுத்து விடலாம் என்றால், யாமினி அம்மாவோ, நீங்கள் செய்து உள்ள இந்த கொடுமையை எல்லாம் இங்கே சாப்பிடுவதற்கு யாரும் இல்லை, அப்படி கோவிலுக்கு எடுத்து செல்ல வில்லை என்றால், இருவரும் தினம் ஒரு கின்னமாக சாப்பிட்டு தீர்க்கணும் என்று மிரட்டவும், நாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்று கோவிலுக்கே எடுத்து செல்ல முடிவு செய்தோம்.

பூசை முடிந்து கீழே வருபவருக்கு எல்லாம் நிறைய நிறைய அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருந்தோம். யாரும் ஒன்றும் சொல்ல வில்லை, பக்தியுடன் பிரசாதம் என்று கன்னத்தில் போட்டு வாங்கிக் கொண்டனர். சரி தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணிக்கொண்டு இருந்த வேளையில் ஒரு ஆன்ட்டி வந்து, பிரசாதம் ரொம்ப நன்றாக இருந்த்தும்மா, புது மாதிரி இருக்கின்றதே. என்ன இது ஸ்வீட் என்று கேட்டார்.

நானும் யாமினியும் நடத்தாத பாடத்தில் இருந்து பரிட்சையில் கேள்வி வந்தால் எப்படி முழிப்போமோ அதை மாதிரி முழித்தோம்... சரி நான் சொல்லுவேன் என்று அவளும் அவல் சொல்லுவாள் என்று நானும் ஒரு நிமிடம் நின்றோம், இருவரும் சொல்லவில்லை என்று தெரிந்ததும் மெதுவாக பால் இனிப்பு என்றோம். அந்த ஆன்ட்டியின் முகத்தில் தெரிந்த ஒரு உணர்ச்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு பொங்கி வரும்.

சற்று நேரத்தில் சுதாரித்துகொண்டு, சிறு பெண்களாகிய எங்களை வருத்தப்பட வைக்கவும் மனசில்லாமல், தேறுதலாக, ஆமாம்ம்மா, ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள் இது ஒரு வகை போல இருக்கின்றது, ரொம்ப நன்றாக இருக்கின்றது என்று சப்பை கட்டு கட்டிவிட்டு சென்றார்கள். கோவில் சொந்தகாரர்கள் நடந்த கூத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள். எங்கள் நிலைமையை கேட்கவே வேண்டாம்.

இந்த சம்பவத்திற்க்கு பிறகு பொதுநலன் கருதி சமையல் கலையை கொஞ்ச நாள் பரனையில் போட்டு விட்டேன். ஆனாலும், யாமினியின் பிறந்த நாளுக்கு செய்த கேக், கலர் குலாப் ஜாமுன், முதன் முறையாக செய்து பார்த்த பாவ்பாஜி, இவை எல்லாம் நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்.

கல்யாணத்திற்கு பிறகாவது என் திறமையை வளர்த்துக் கொள்ளலாம் என்று பார்த்த்தால் துரதிரதிருஷ்டமாக, கூட யாரவது - என் அம்மா அல்லது அத்தை இருந்து கொண்டே இருந்தனர். ஆகையால் தனியாளாக நின்று என் திறமையை காட்டும் வாய்ப்பு கிடைக்க்வே இல்லை. கல்யாணத்திற்க்கு பின் என் வீட்டுகாரர் இளைத்து விட்டார், அதற்க்கு நான் என்னங்க செய்ய முடியும். எங்கள் வீட்டு இஸ்திரிகாரி முதல் போகின்ற கல்யாணத்தின் சத்திரத்தின் வாட்ச்மேன் உட்பட, என்ன உங்க வீட்டுக்காரர் இவ்வளவு இளைத்து விட்டாரே என்று குசலம் விசாரிப்பார்க்ள்... யோவ் இத்தனைக்கும் என் சமையல் இல்லையா என் வீட்டில், எங்க அம்மா தான் சமைக்கிறார்கள் என்று கூவி கூவி சொன்னாலும், நீங்க ஒழுங்கா பார்த்துக்கோங்க என்று என் பிரஷரை ஏற்றி விடுவார்கள்.

நானும் என் வீட்டுகாரரிடம் என் சமையல் பிரதாபங்கள் பற்றி பீற்றிக் கொண்டாலும் அவர் நீ சொல்லும் பெயர்களை எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கின்றேன், நீ செய்து பார்த்தில்லையே என்று குறை பாட, நான் மேலே நடந்த நிகழ்ச்சியைக் கூற, நான் பார்க்க வேண்டிய தேவையே இல்லை, பக்கத்தில் உள்ளா ஹோட்டடில்லேயே பார்த்து கொள்ளுகிறேன் என்று பரந்த மனப்பான்மையுடன் கூறி விட, சமையல் அறை இன்னும் என் வருகைக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டே இருக்கின்றது....

ஜெயா.