Friday, December 29, 2006

2006 ஆம் ஆண்டின் தலை சிறந்த 10 பெண்கள்...

இந்த வார அவள் விகடனில் ஒரு கட்டுரை.... இந்த ஆண்டின் தலைசிறந்த 10 பெண்மணிகள் பட்டியலிட்டு எழுதி இருந்தனர். அரசியல் பெண்மணிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு சாதணையாளர்க்ள் என்று இல்லாமல் விதி வசத்தால் தங்கள் வாழ்க்கையில் எதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்திருந்தாலும் அதை பெரும் பாதிப்பாக கருதாமல் எப்படி எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு வாழ்கின்றனர் என்பதை பற்றி இருந்தது. இவர்களை பற்றி முந்தைய இதழ்களில் பெரிய கட்டுரை வந்திருந்தாலும், வருட சிறப்பிதழ் என்பதால் summarize பண்ணி இருந்தார்கள்.

ஒவ்வொருவரையும் பற்றி படிக்கும் போது கண்கள் கலங்கி விட்டது. கணவர் படுக்கையில் விழுந்து 18 வருடங்க்ள் ஆகியும் அவருக்கு பணிவிடைகள் செய்து கொண்டு, அவர் உடல் நலம் சரியாகி விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வாழும் மனைவி, தாயும் தந்தையும் இல்லாமல் தங்கை மற்றும் தம்பியரை படிக்க வைத்து கொண்டு தானும் படிக்கும் சிறுமி, தன் பெண்ணுக்கு சரியான மூளை வளர்ச்சி சரி இல்லாமல் படுக்கையை விட்டு எழ முடியாமல் இருந்தாலும், பார்வை ஒன்றே போதும் என்ற எண்ணத்தோடு சைகை மொழியை கற்று கொடுத்து பத்தாவது பாஸ் செய்ய வைத்திருக்கும் தாய் என இவர்கள் செய்துள்ள சாதணைகள் தான் எத்தனை??

கால் ஊனமாக இருந்தாலும் படகோட்டி குடும்பத்தையே காப்பாற்றும் சிறு பெண், கை ஊனமுற்று இருந்தாலும் I.A.S ஆவதே லட்சியமாக கொண்டு வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கும் மங்கை, தினமமொரு உறுப்பு செயலிழந்து கொண்டு இருந்தாலும் (எழுதும் போதே கை மனம் பதறுகின்றது), உற்சாகம் இழக்காமல் பணி புரிந்து கொண்டு இருக்கும் பெண், கோவில் ஒதுவாராக ஒரு தாழ்த்த பட்ட பெண், தன் மகனுக்காக உயிரை பணயம் வைத்து கல்லீரலை தானமாக கொடுத்த ஒரு தாய், கோர விபத்தில் கை விரல்களை இழந்த பிறகும் நம்பிக்கை இழக்காமல் செயற்க்கை கைகளை கொண்டு பத்தாவது பரிட்சையும் எழுதி 1137 மதிப்பெண் எடுத்து சாதனை செய்துள்ள மாணவி, தான் கஷ்டத்தில் இருந்தாலும் தன் மகனை நாட்டில் உள்ள தலை சிறந்த கல்லூரியில் படிக்க வைத்து இருக்கும் ஒரு தாய் என இவர்கள் தாண்டி வந்திருக்கும் தடை கற்க்கள்தான் எத்தனை??

இவர்களை பார்க்கும் போது நம்முடைய மிக முக்கியமான பிரச்ச்னைகளான, மாமியார் சரியில்லை, நாத்தனார் பொறாமை பிடித்தவள், என் கணவருக்கு என் மேல் ப்ரியம் கிடையாது, என்னுடைய boss ஒரு முசுடு, எனக்கு உண்மையான நண்பர்கள் கிடையாது, என்னை யாருக்கும் பிடிக்காது, என்னை புரிந்து கொள்பவர்கள் யாருமே கிடையாது, போன்றவற்றை நினைப்பது கூட பாவம்.

வாழ்க்கையில் பிடிப்பு தளர்ந்து அடுத்து என்ன என்று தெரியாமல் இருப்போர், மற்றும் தீவிரமான comparison ல் மாட்டிக்கொண்டு தாழ்வு மனப்பான்மையால் கஷ்டபட்டுக் கொண்டு இருப்போருக்கு இந்த மாதிரி மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர் என்று தெரிந்து,தெளிந்து முன்னேற்ற பாதையை வகுத்துக் கொள்ளல் வேண்டும். இனி அற்ப விஷயங்களை நினைத்து பொன்னான நேரத்தை கவலைப்பட்டு வீணடிக்காமல் இருக்கும் இந்த வாழ்க்கையை எப்படி பிரயோஜனமாக செலவழிக்கலாம் என்று எண்ணி செயல் படுவோமாக.

அவள் விகடனிலிருந்து scan செய்த பக்கங்கள் - சாதனை பெண்களின் photo மற்றும் விவரங்களுடன்.





ஜெயா.

Sunday, December 24, 2006

முதல் கச்சேரி அனுபவம்....

ஐயோ.. தலைப்பைப் பார்த்து இது நான் கச்சேரியில் பாடிய முதல் அனுபவமோ என்று தவறாக எண்ணி விடாதீர்க்ள். இந்த மார்கழி மாத கச்சேரியில் நாங்கள் சென்ற முதல் கச்சேரியின் அனுபவம் தான் இந்த பதிவு.

நானும், என் officeல் என்னுடன் பணி புரியும் சுகந்தியும் சேர்ந்து வாணி மஹாலில் நடக்கின்ற திரு. ஜேசுதாஸ் கச்சேரிக்கு செல்லாம் என்று முடிவு செய்தோம்... வண்டி பார்க் செய்யவே இடம் இல்லாத போது தான் தெரிந்தது, நாம் எதிர்ப்பார்த்ததை விட கூட்டம் நிறையவே இருந்தது என்றும், நாங்கள் முன்பதிவு ஏதும் செய்யாமல் மகாராணிகளை போல் இறங்கி இருக்கின்றோம் என்று. எங்கள் முன்னாடி நின்ற காரில் இருந்து பட்டு புடவைகளும், ஜொலிக்கும் வைர கம்மல்களுடன், தலை நிறைய பூவுமாக இறங்கிய மாமிகளை பார்த்து, ஒரு நிமிடம் கச்சேரிக்கு வந்தோமா இல்லை கல்யாணத்திற்க்கு வ்ந்தோமா என்று சந்தேகம் வந்தது நிஜம்...

சரி வந்தோம், உள்ளே சென்று கேட்டு விடுவோம் என்று போனால், டிக்கெட் கொடுக்கும் இடம் கண்ணில் படவே இல்லை, அப்பொதாவது எங்கள் மரமண்டைகளுக்கு புரிய வேண்டாமா, ஒரு முறை சபாவையே சுற்றி விட்டு, அருகில் நின்றிருந்தவரை கேட்கும் போது, அவர் எங்களை ஒரு அற்ப புழுவைபோல் பார்த்து, டிக்கெட் எல்லாம் sold out என்றார்.

சே, ஜேசுதாஸ்க்கு எங்கள் முன்னால் பாடும் குடுப்பினை இல்லாமல் போய்விட்ட்தே என்று புலம்பலோடு அடுத்த இடத்திலேயாவது try பண்ணுவோம் என்று நாரதகான சபாவிற்க்கு படை எடுத்தோம். அங்கே அடுத்த நாள் அருணா சாய்ராம் அவர்களின் கச்சேரிக்கு டிக்கெட் கிடைக்கிறதா என்று பார்த்தால் அங்கேயும் housefull board! அடடா என்னடா இது, நாட்ல ஒரு கச்சேரி கேட்கிறது இவ்வளவு கஷ்டமா இருக்கே என்று நினைத்துக் கொண்டு கஜினி முகமது கணக்காக mylapore fine arts க்கு சென்றோம்.

அங்கே, T.V. Sankara narayanan அவர்கள் கச்சேரி நடந்து கொண்டு இருந்தது, எங்கள் அதிர்ஷ்டம், டிக்கெட் இருந்தது, அப்படியே, மறுநாள் பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் கச்சேரிக்கும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். கொஞ்சம் வயதானவர், புன்னகை புரியும் முகம், நல்ல சாரிரம், எத்தனையோ கச்சேரி மேடைகளை கடந்து வந்தவர் என்று பார்த்தாலே தெரியும் படிக்கு அநாயாசமாக பாடிக் கொண்டு இருந்தார்.

கொஞ்சம் தமிழ் பாடல்கள், நடுவில் தெலுங்கு, இடையில் ஆலாபனைகள் என்று மனிதர் வெளுத்து வாங்கி கொண்டு இருந்தார். முதல் பத்து நிமிடம் அவரை விட்டு கண்களை எடுக்க முடியாமல் கேட்டு கொண்டு இருந்த நாங்கள் மெதுவாக அக்கம் பக்கம் பார்வையை செலுத்தினோம்...

பக்கத்தில் இருந்த மாமி, கையில் கச்சேரி டைஜ்ஸ்ட் என்ற பத்திரிக்கையும், காதில் பாட்டுமாக இரு வேலைகள் செய்து கொண்டு இருந்தார். அந்த பக்கம் ஒரு மாமா ஆனந்த விகடனை அடுத்த நாள் பரிட்சைக்கு படிப்பவர் போல படித்து கொண்டு இருந்தார். கச்சேரியை ரசித்து கேட்டு கொண்டு இருந்தவர்களும் இருந்தார்கள்... அங்கே இருந்த அனைத்து மாமிகளும் ஒன்று பட்டிருந்த விஷயம் என்ன என்றால் - வைரக் கம்மல். அதிலும் ஒரு சிலர் போட்டுக் கிட்டு இருந்த கம்மல்களில் இருந்து கண்களை எடுக்க முடியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருந்தோம்.


ஒரு மணி நேரம் கழித்து பார்த்தால், கொஞ்சம் பேர் எழுந்து வெளியே சென்று கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர், என்ன விஷயம் என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை... ஆகவே கச்சேரியை ரசித்து கொண்டு இருந்தோம், ஆனால் கச்சேரி முடிகின்ற வழியையே காணோம், நாங்களும் இதுதான் கடைசி என்று பார்த்தால் மனுஷர் அடுத்த பாடலை ஆரம்பித்து கொண்டு இருந்தார். மணி ஒன்பதை தாண்டிய பிறகு, பசி வயிற்றை கிள்ள, இதற்க்கு மேல் late ஆக போனால் வீட்டில் நல்ல மரியாதை கிடைக்கும் என்பதால், இடையில் கிளம்பினோம்.

வெளியே வந்தால் கமகம என்று மணக்கும் canteen! அடப்பாவிங்களா இதுக்கு தான் எல்லாம் அடிக்கடி escape ஆகிட்டிகளா! நமக்கு தெரியாம போச்சே என்று சாப்பிட உக்காந்தா, மல்லிகை பூ போல இட்லி, நல்ல ஐயர் வீட்டு சாம்பார், நெய் சொட்டும் பொங்கல், முருகல் தோசை என்று ஓரு வெட்டு வெட்டிட்டு, நடக்க முடியாம நடந்து, வண்டிய எடுத்துக் கிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டில் வந்து நாங்க கச்சேரியை பத்தி பேசினதை விட வைரக்கம்மல் பத்தி பேசினது தான் நிறைய என்று எல்லோரும் பேசிக்கறாங்க.. நான் எங்க வீட்டுகாரர் கிட்ட புலம்பினதை கேட்ட எங்க வீட்டு வேலைகார பெண், அண்ணா அக்கா ரொம்ப ஆசை படறாங்க ஒன்னு வாங்கி கொடுத்துங்க என்று recommend பன்ற நிலமை ஆகிடுச்சு என்றால் பார்த்துக்கோங்க...

ஆக மொத்தம் நாங்க தெரிஞ்சுகிட்டது என்ற என்றால், இது ஒரு தனி உலகம்... தினம் ஒரு பாடகர், வெவ்வேறு பாடல்கள், ஒரு நாளைக்கு நான்கைந்து கச்சேரிகளை ஒவ்வொரு சபாக்களில் கேட்டு அலசி விமர்சனங்கள் என்று வருஷத்தில் இந்த மார்கழி மாதத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள் பலர்... பிள்ளைகள் அமெரிக்கா, லண்டன் என்று செட்டில் ஆகி விட இங்கே இருக்கும் பெரியவர்களுக்கும் இது ஒரு நல்ல relaxation, கச்சேரிக்கு வந்திருந்தவர்கள் 95% நாற்பது வயதை தாண்டியவர்கள் என்பது இதற்க்கு சான்று.

எது எப்படியோ, எனது ரொம்ப நாளைய கச்சேரி கேட்கும் ஆசை நிறைவேறியது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது....

ஜெயா.

Thursday, December 21, 2006

சங்கீதமும் நானும்....

பிறந்தது வளர்ந்தது எல்லாம் கிராமத்தில் என்பதால், சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வேண்டிய நிலமை... எதோ காதில் விழுகின்ற சினிமா பாடல்களை முனுமுனுப்பதோடு போய்கொண்டு இருந்த வாழ்க்கை இந்த சென்னை மாநகரத்திற்க்கு வந்த பிறகு "அடடா வாழ்க்கையில சங்கிதம் கத்துக்காம போயிட்டோமே" என்பது ஒரு பெரிய குறையா போச்சு.

எங்க அம்மா கிட்டே ஒரே குறை பாடிக்கிட்டு இருந்தேன்... "சே ஒரு வருங்கால சித்ரா, பாம்பே ஜெய ஸ்ரீ இந்த உலகம் இழந்துடுச்சுமா உன்னால" என்று... எங்கம்மா ஒரு முறை முறைச்சுட்டு "பொறக்கும் போதே தெரியுமாம் காக்கையும் குயிலும்" என்று நக்கலா சொல்லிட்டு வேலையை பார்த்துகிட்டு போய்ட்டாங்க.

அதுக்குள்ள எனக்கும் பாட்டு கத்துக்கற வயசு தாண்டிடுச்சு என்று (பாடி கழுதை வந்துடுச்சுன்னா என்ன பண்றது என்ற பயமும் வந்துடுச்சு) நம்மால முடிஞ்ச எதாவது இசை உலகத்துக்கு பண்ணனும் என்ற் ஆர்வத்திலயும், ரொம்ப ஆராய்ச்சி பண்ணி, வீணை கத்துக்கலாம் என்று முடிவு செய்தோம்.(இதுல எங்க்காவும் சேர்த்தி.)

சைக்கிள் எடுத்துகிட்டு, டி.நகர் full-a சுத்தி சரோஜனி தெரு ல ஒரு மாமி வீணை சொல்லிக்கொடுக்கறதை கண்டு பிடிச்சு போய் பார்ததோம். தானே கத்துக்க ஆர்வத்தில வந்த எங்களை பார்த்து பயங்கர impress ஆகி கத்து குடுத்தாங்க...

கொஞ்ச நாள் கழிச்சு, வீட்டிலேயே practise பண்ண ஒரு வீணையும் வாங்கினோம். அதுல இருந்து எங்க வீட்டுக்கு guest வரதே குறைஞ்சு போச்சு என்று ரொம்ப நாள் கழிச்சுதான் கண்டு பிடிச்சோம். அப்போ தான் டி.வி. ல வேற "உடல் பொருள் ஆனந்தி" என்று ஒரு திகில் தொடர் ஒன்று போட்டுகிட்டு இருந்தான். அதுல வர heroine நிறைய மல்லிகை பூ வைச்சு கிட்டு வீணை வாசிப்பாள். அதை பார்த்து வேற எஙக மக்கள் டென்ஷன் ஆகிட்டு இருந்தாங்க...

இப்படி இரண்டு வருஷம் ஒட, நானும் கீர்த்தனைகள் வரைக்கும் கத்துக்கிட்டேன். அப்புறம் வேலை, மற்ற விஷயங்களில் busy ஆகிட வீணை பின்னாடி போயிடுச்சு....

எனக்கு வீட்டுகாரரா வந்தவரோ, சங்கீதம் என்றால், பக்கத்து வீட்டு பொண்ணு பேரா என்று கேட்டுக்கும் அளவிற்க்கு சங்கீத சூனியம். கச்சேரிக்கு போகலாம் என்றால், சொல்கின்ற் இடத்திலேயே குறட்டை விடுவார். இந்த கச்சேரி சீசனிலியாவது ஒரு கச்சேரி போய் ரசித்து கேட்கனும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறேன். யார் ஜெயிக்கிறோம் என்று பார்ப்போம்.

ஆனாலும் இந்த பாட்டு பாடற்வ்ங்களை பார்த்தா பயங்கர பொறாமையா இருக்கும். இவங்க தொண்டைல மட்டும் கடவுள் என்ன வைச்சு இருக்கார்? கை போகிற இடமெல்லாம் குரல் போகுதே என்று... அடுத்த ஜென்மம் என்று ஒன்னு இருந்தா அதிலெயாவது ஒரு பாடகியா பிறந்து பிரமாதமா பாடணும் என்ற ஆசை தீருமா என்று பார்க்கனும்....

ஜெயா.
தாய் மொழியாம் தமிழில் எழுத வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறுகின்றது.....

என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்து அகமும் புறமும் என்று வைத்து உள்ளேன். என்னுள் நடக்கும் விவாதங்ளையும், வெளியே காண கிடைக்கும் வேடிக்கைகளையும், நான் பார்க்கும் விதமாக எழுத ஒரு வாய்ப்பாக இந்த பதிவை உபயோக படுதத எண்ணம்... ஆனால் அடுதத நிமிடம் நடக்க போவதே அறிய முடியாத இந்த உலகில், எதற்க்கு உத்திரவாதம் அளிக்க முடியும்??

வாக்குறிதியை காப்பாற்றினேனா இல்லையா என்பதை அடிக்கடி இங்கு வந்து அறிந்து கொள்ளுங்ளேன்....

ஜெயா.