Monday, March 31, 2008

போலிங் ஆடலயோ போலிங்...

ரொம்ப நாளாகிவிட்டது எழுதி... இனி மேலாவது அடிக்கடி எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்பதிவை எழுதுகிறேன்....


அலுவலகத்தில் ஒரு போட்டிக்கான அறிவிப்பினை பார்த்தேன், இன்டர் ஆபிஸ் இன்டோர் கேம்ஸ் - கேரம், செஸ், பெட்மின்டன், போலிங் என கார்ப்பரேட் மக்களின் திறமையை சோதிக்கும் பல போட்டிகள் நடை பெறப் போகின்றது என்று குறிப்பிட்டு பங்கேற்ப்போர் விவரம் கேட்டு எழுதி இருந்தனர். எங்கள் அலுவலகத்தில் இருந்து கூட பலரும் பங்கேற்க்கும் போட்டிகளில், போலிங் செய்வதற்க்கு மட்டும் யாரும் பெயர் கொடுக்க வில்லை என்றதும் என்னுடைய இயல்பான ஆர்வக்கோளாறு உந்தி தள்ள, நாம் போய் ஏன் நம்முடைய போலிங் திறமையை ஊருக்கு காட்ட கூடாது என்ற ஒரு எண்ணத்தில் சென்ற போது, அது ஒரு குழு போட்டி என்றும் நான்கு பேர்கள் தேவை என்றும் தெரிய வந்தது. இது கூட தெரியாமல் வந்து விட்டாயா பெயர் தருவதற்க்கு போன்ற ஏளன பார்வைகளை நாம் மதிப்பதில்லை பார்த்துக் கொள்ளுங்கள்...


சரி என்று என்னைப் போல போலிங் பற்றி எந்த இழவும் தெரிந்து இருக்க கூடாது என்ற கட்டாய ருல்க்கு உட்பட்டு மூன்று பேர் சேர்ந்து கொள்ள, நாங்களும் ஒரு குழுவாக பெயர் கொடுத்தோம். எங்கள் அலுவலகத்தில் இருந்தே ஆட்டம் ஆட தெரிந்த இன்னொரு குழுவும் சேர்ந்து இருந்தனர். என்னதான் இருந்தாலும் தெரியாமல் ஆடுவதுதான் உசத்தி என்றும், ஆட்டம் தெரிந்தால் யார் வேண்டுமானாலும் ஆடலாமே என்று உதார் விட்டுக்கொண்டு இருந்தோம்.


போட்டி இடம் மாயாஜால், கிழக்கு கடற்கரை சாலை. நான் எனது 2.5 வயது மகனையும், என் குழு நண்பர் அவர் பெண்ணையும், இந்த இரு வால்களை மேய்ப்பதற்க்கு அவர் மனைவியையும் அழைத்து வந்தார். பின்னே நாங்கள் எங்கள் போலிங் திறமையை காட்டுவோமா இல்லை குழந்தைகளை மேய்ப்போமா?? இத்தனை பேர்களை கிளப்பி கூட்டிக்கொண்டு போக வேண்டாமா என்ன? 11 மணி போட்டிக்கு சரியாக 10.55 க்கு போய் சேர்ந்தோம்.


பங்கு பெறும் அனைவரும் கம்பெனி பெயர் பதித்த டி. ஷர்ட் தான் போட்டு வர வேண்டும் என்ற கட்டாய விதி இருந்த்தால் போலிங் இடம் ஜெ ஜெ என்று ஒரு மினி டி.ஷர்ட் ப்ரமோஷனல் கடை போல இருந்த்து. எங்களை போலவே பல்வேறு பெரிய கம்பனி மக்கள் பொழப்பில்லாமல் வந்து காத்து இருந்தனர்.


ஆடுகளம் திறந்தவுடன் காத்து இருந்த மக்கள் அனைவரும் டிரயல்ஸ் போட்டு பார்த்துக் கொண்டு இருந்தனர். சரி நாமும் நம் திறமையை சோதித்து பார்க்கலாம் என்று நினைத்த போது, எப்படி தான் மூக்கு வேர்க்குமோ, அங்கிருந்த பணியாளர் வந்து யாரும் பந்து வீசக்கூடாது என்று கூறி சென்று விட்டார்.


எங்களுடையது குழு முதல் ரவுண்டில் ஆடுவதாக இல்லை என்று தெரிந்தபின் கண்களை அக்கம் பக்கம் சுழல விட்டேன்... கண்ட காட்சிகளை என்ன என்று சொல்லுவது...


மூன்றெழுத்து பாபுலர் கம்பெனியிலிருந்து இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் உற்சாகபடுத்த என்று சிலர் வந்து இருந்தன. பெண்கள் இருவரும் அழகிகள் என்று கூற முடியாவிட்டாலும், பார்ப்பதற்க்கு நன்றாகவே இருந்தனர். குழுவில் ஒருவன் பந்தை சூப்பராக வீசி ஸ்ரைக்(போலிங் டெர்மினாலாஜி உபயோகிப்பதை கவனியுங்கள்) செய்து விட்டு வந்து அமர, இரு பக்கம் இருந்த இரு இருக்கைகளில் இரண்டு பெண்களும் அமர்ந்து அவனை பாராட்டினர். அந்த பையனும் சரியான ரியாக்ஷ்ன் கொடுத்து, இருக்கையின் பிடிமேலும், இரு பெண்களின் தோள்களிலும் கை போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டான். அடப்பாவி என்று நான் பார்த்து கொண்டு இருக்க இரு பெண்களின் முகத்திலும் பெருமையை தவிர வேறு எந்த எக்ஸ்பிரஷனையும் காணோம்... இத்தனைக்கும் பையன் சூப்பர் எல்லாம் இல்லை, சாதாரனமாகதான் இருந்தான்.... ஆணும் பெண்ணும் தொட்டு பேசிக் கொள்வது தப்பு என்னும் மனப்பாண்மை எனக்கு இல்லை என்றாலும், ஒரே சமயத்தில் இரண்டு பெண்களையும் உராய்ந்து பேசும் லாஜிக் என்ன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.... உங்களுக்கு தெரிந்து இருந்தால் சொல்லுங்களேன். கொடுமை என்ன என்றால் அந்த பெண்களும் ஒன்றும் சொல்லவில்லை, அப்படியே ஒரு வள்ளி தெய்வயானை எந்த உணர்ச்சியில் இருப்பார்களோ அப்படி ஒரு போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தனர்.


சரி, இது போல குடும்ப காட்சிகள் நிறைந்த இடத்திற்க்கு வந்து இருக்கோம் போல என்று மனதை தேற்றிக்கொண்டு ஆட்டத்தை பார்க்க ஆரம்பித்தோம், ஒரு மினி பிணம் அளவிற்க்கு கனக்கும் பந்தை எடுத்து தூரத்தில் இருக்கும் ஸ்டிக்ஸை அடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், அனைவரும் ஆடிக்கொண்டு இருந்தனர். வந்து இருந்த மற்றும் சில பெண்கள் பயங்கர சூப்ப்ராக பந்து வீசுவதைப் பார்த்தும் கொஞ்சம் ஜுரம் வருகின்றார் போல இருந்தது...


இன்னொரு புறம், இன்னொரு சூப்பர் காட்சி. முதல் காட்சி ஒரு விதம் என்றால் இது இன்னொரு வகை. ஆட வந்து இருந்தவனின் பெண் தோழி, ஒரு இன்ச் அளவிற்கு மேக்கப் செய்து கொண்டு, நவீன நாகரீக ஆடை அணிந்து வந்து இருந்தாள். கண்டிப்பாக அந்த உடையை பற்றி சொல்லியியே தீர வேண்டும். உள்ளே ஒரு கருப்பு உடலை கவ்வி பிடிக்கின்ற உடை, மேல அதே போல முழங்கால் வரை ஒரு பூப்போட்ட டாப்ஸ், அதற்க்கு மேலே இடுப்பு வரை வருகின்ற இன்னொரு டாப்ஸ். கீழே கருப்பு கலர் டைட்ஸ். இத்தனை போட்டு இருந்தாலும் பலன் ஒன்றும் இல்லை :-) இப்படி பக்கத்தில் ஒருத்தி இருந்தால் எப்படி அந்த பையன் பாலை பார்த்து விளையாடுவான்? ஏதோ சொதப்பலாக போட்டுக் கொண்டு இருந்தான். அதே பெண்ணை அந்த பையன் மேக்கப் இல்லாமல் தெருவில் பார்த்தான் என்றால் அவனுக்கே அடையாளம் தெரிவது கஷ்டம் என்று நினைக்கிறேன்.


இந்த மாதிரி பராக்கு பார்த்துக் கொண்டும் குழந்தைகளை மேய்த்து கொண்டும் இருந்ததில், முதல் ரவுண்ட் முடிந்து விட, கட முடா என்ற வயிற்றுக்கு கிழே இருந்த restaurentக்கு சென்று சாப்பிட்டு விட்டு மேலே வருவதற்க்குள், இரண்டாவது ரவுண்டும் ஆரம்பித்து விட, இப்படியே போனால் நம்முடைய டர்ன் வருவதற்க்குள் பொழுது சாய்ந்து விடும் என்று ஆறாவது அறிவு எடுத்து உரைக்க அங்கே இருந்த ஆர்கனைசர் வால் பிடித்து அலைய ஆரம்பித்தோம். குழந்தைகளை அழைத்து சென்றது எதற்க்கு உதவியதோ இல்லையோ இதற்க்கு ரொம்ப நல்லா உதவியது, 5 நிமிடத்திற்க்கு ஒருமுறை அவரிடம் போய், சார் குழந்தைகளை அழைத்து கொண்டு வந்து இருக்கின்றோம், திரும்ப போகனும் என்று நச்சு செய்து சான்ஸ் வாங்கி விட்டோம்...


அடுத்ததாக ஆட்ட திறமையை காட்ட வேண்டிய தருணம்... எங்களுடன் ஆட வேண்டிய டீம் மக்களுடன் அறிமுகம் ஆகிக் கொண்டோம், அவர்கள் எங்களை கேட்ட முதல் கேள்வி, "எங்களுக்கு ஆட தெரியாது, உங்களுக்கு தெரியுமா?" அடடா நமக்கு ஏத்த மக்கள்தான் வந்து வாய்த்து இருக்கின்றார்கள் என்ற குஷியுடன் ஆட ஆரம்பித்தோம். நான்கு பேரில் ஒருத்தர் ஹிந்தி பட நடிகர் போல நல்ல ஸ்மார்ட்டாகா இருந்தார், சரி நமக்கு ஆடுவதற்க்கு ஒரு மோடிவேஷன் என்று, நான் தான் முதலில் களமிறங்கினேன். ஒவ்வொரு பாலும் சும்மா சொல்ல கூடாது ஒரு 10 கிலோ கனக்கும் போல, அதை எப்படி மூன்று விரல்களை உபயோகித்து உருட்டி விடுவது?? நான் விட்ட பந்தை நானே பின்னே ஓடிப் போய் தள்ளி விட வேண்டிய வேகத்தில் மெதுவாக போய் அடித்தது. ஏதோ ஒரு 5, 6 விழுந்தது. திரும்ப போட்ட போது, சுத்தம், அடுத்த லேனுக்கு சென்று விடுவதை போல ஒரு ஓரத்தில் உருண்டு விட்டது. பக்கத்தில் நாங்கள் நச்சு செய்த ஆர்கனைசர், இதற்க்கா இந்த அட்டஹாசம் செய்து சான்ஸ் வாங்கினீர்கள் என்று கேவல லுக் விட்டு கொண்டு இருந்ததை யாராவது கவனிப்பார்களா என்ன??


மற்ற குழு நண்பர்கள் கதையும் அதே தான்... ஒருவர் மட்டும் அடிக்க வேண்டிய பொருட்களை தன்னுடைய வருங்கால மனைவியாக நினைத்து போட்டு தாக்க, எங்கள் ஸ்கோர் உயர்ந்து கொண்டு இருந்தது. நான் ஒரிரண்டு முறை பத்தையும் அடித்து இருந்து இருப்பேன்.. நேராக அடித்தாலும், நம்முடைய இளகிய மனதிற்க்கும், கொடி போன்ற உடலுக்கும் (சரி சரி, கொஞ்சம் பெரிய கொடி) கைகளுக்கும் வீசி எறியும் திறமை பத்தவில்லை...


முடிவினை நெருங்கும் போது, நாங்கள் பந்தை போட்டோமா,அல்லது அது தானாக உருவிக் கொண்டு ஓடிவிட்டதா என்று தெரியாத நிலைமை. நம் ஹீரோவும் சொதப்பலாக தான் போட்டார், என்பது ஒரு ஆறுதல். அப்படி இப்படி என்று பத்து சான்ஸும் முடிய, எங்கள் ஸ்கோர் அவர்களை விட 50 பாய்ன்ட்ஸ் அதிகமாகிவிட நாங்கள் வென்றவர்கள் ஆன சந்தோஷத்தில் குதிக்க, ஆர்கனைசர் வந்து ஒரு குண்டை போட்டார், ஆடிய மொத்த குழுவினரின் மதிப்பெண்களை பார்த்து முதல் 10 ஸ்கோகர்கள் தான் அடுத்த ரவுண்டிற்க்கு தேர்வாவர் என. அப்படிப் பார்த்தால் நாங்கள் கடைசி பத்தில் அல்லவா வருவோம்???


சரி ஏதோ வந்ததிற்கு நன்றாக ஆடினோம், பொது அறிவினை வளர்த்துக் கொண்டோம், காண வேண்டிய அற்புதமான காட்சிகளை கண்டோம், ஆர்கனைசர்கள் கொடுத்த கூப்பனின் மூலம் கிழே திரும்ப ஐஸ்கிரீம் சாப்பிட்டோம், என ஒரு சனிக்கிழமை பொழுதை நல்ல விதமாக கழித்தோம் என்ற திருப்தியுடன் வீடு திரும்பினோம். அடுத்த வாரம் முழுவதும் அலுவலகத்தில் நாங்கள் ஜெயித்த கதையை தேய்ந்த ரிக்கார்ட் போல போவோர் வருவோர் அனைவரும் காதை பொத்தி கொண்டு ஓடும் அளவிற்க்கு பீத்திக்கொண்ட கதையினை சொல்லவும் வேண்டுமா என்ன??

ஜெயா.

7 comments:

பொன்ஸ்~~Poorna said...

வழக்கம் போல உங்க பக்கத்துக்கு வந்து நல்லா அடிபட்டுகிட்டேன்.. பின்ன விழுந்து விழுந்து சிரிச்சா அடிபடாம என்ன செய்யும்? :)

நம்ம கூட ஒரு தரம் பௌலிங் முயற்சி பண்ணி, அப்புறம் பேட்டால யாரும் அடிக்காத ஒரு பாலை நாங்க போடவே மாட்டோம்னு சபதமே எடுத்திருக்கோம் தெரியும்ல (சீசீ இந்த பழம்... ;))

ஜெயா said...

நன்றி பூர்ணா, எப்படி இருக்கிங்க? இந்த அட்வென்ச்சர் எல்லாம் பண்ணாம இருந்தா, அப்புறம் என்ன வாழ்க்கை சொல்லுங்க?

ஜெயா.

Anonymous said...

ஜெயா, இந்த அருமையான மற்றும் அழகிய வாய்ப்பை இழந்து விட்டோம் என்று நினைத்தால் மணதிற்கு கொஞ்சம் க்ஷ்டமாக உள்ளது.


பாலசங்கர்.

ஜெயா said...

எல்லாவற்றுக்கும் கொஞ்மாவது கொடுத்து வைத்து இருக்க வேண்டாமா?? அதுவும் உங்களுக்குத்தான் அன்று அலுவலக வேலை இருந்ததே.. இப்படி இருக்கும் என்று தெரிந்து இருந்தால், தலை போகிற வேலையாக இருந்தாலும் கண்டிப்பாக வந்து இருந்து இருப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியும் :)

ஜெயா.

உண்மைத்தமிழன் said...

ரசித்துப் படித்தேன்..

அந்த ஹீரோ, பெண்கள் பற்றிய அறிமுகம், உடைகள் பற்றிய தகவல்கள்.. வெளிப்படையாக எழுதிய அகமும், புறமும் வாழ்க..

நவரஸங்கள் கலந்து எழுதும் இப்படியொரு திறமையை வைத்துக் கொண்டு வருடத்திற்கு 3 பதிவுகள் போடுவது தப்பும்மா..

தொடர்ந்து எழுதவும்..

Hari said...

ஆமாங்க , ரொம்ப நாளாகிவிட்டது நீங்க எழுதி...

எதாவது எழுதுங்க, ஆபீஸ்ல ரொம்ப வேலையோ :-)

-ஹரி

ஜெயா said...

நன்றி உண்மை தமிழன் அவர்களே, பயங்கர வேலையில் இருந்து இப்போது தான் ஓய்வு கிடைத்து இருக்கு. கண்டிப்பாக ஒரு பதிவை அடுத்த ஒரு வாரத்திற்க்குள் எழுதி விட வேண்டும் என்று இருக்கிறேன்.

ஹரி, பொறுத்திருந்தது போதும், பதிவை போட புறப்பட்டுவிட்டேன் :)

ஜெயா.