Thursday, June 21, 2007

திக் திக் திக்....

கல்யாணம் பண்ணிப் பார் வீட்டை கட்டிப் பார் என்ற பழமொழியின் அர்த்ததை பாதியை என் கல்யாணம் ஆகும் போது அனுபவபட்டு தெரிந்து கொண்டேன், அது கழிந்து மூன்று வருடம் கழிந்து, மீதியினை அனுபவித்துப் பார் என்று கடவுள் என் தலையில் எழுதி விட்டார் என்று நினைக்கிறேன்...


நாங்கள் வீடு தேடி அலைந்தது பற்றி ஒரு மெகா சீரியலே எடுக்கலாம்... ஒன்று area பிடித்தால் வீடு பிடிக்காது, வீடு பிடித்தால் area பிடிக்காது, வீடு area இரண்டுமே பிடித்தால் யானை விலை சொல்லுவார்கள், அப்படி அதுவும் சரியாக இருந்தால், உள்ளே போன உடனே ஆளையே அடித்து தூக்கும் அளவிற்க்கு வாஸ்து மோசமாக இருக்கும், அப்படி கடவுளின் அற்புதத்தால் அதுவும் பிடித்து இருந்தால், அது வீடு கட்டும் இடமாக இருக்காது, வாரக்கடைசியில் போய் relax செய்யும் ஆளில்லாத அத்துவான காடாக இருக்கும், அப்படியும் இல்லையென்றால் எனக்கு பிடித்து எனதருமை வீட்டுக்காரக்கு பிடிக்காது, அவருக்கு பிடித்து என்றால் என் கண்ணுக்கு கன்றாவியாக தெரியும்..... இது மனைக்களுக்கும் பொருந்தும்... இப்படியாக, நாங்கள் தென் சென்னை முழுவதையும் சல்லடை போட்டு சலித்து அலுத்துக் போய், நமக்கு சொந்த வீட்டு குடுப்பினை இல்லை என்பதை ஒருவாறாக ஒத்துக் கொண்டு இருக்கும் போது, மேடவாக்கத்தில் ஒரு builder கட்டிக் கொண்டு இருந்த வரிசை வீடுகளில் ஒன்று எங்களுக்காகவே காத்துக் கொண்டு இருக்கின்றது என்பதை அறிந்தோம்... பார்த்த முதல் பார்வையிலேயே எங்கள் இருவருக்கும் பிடித்து விட்டது, கட்டினால் இந்தப் பெண்ணைத்தான் கட்டுவோம் என்று சிவாஜியில் நிற்கும் ரஜினி குடும்பம் போல முனைந்து, வீட்டை வாங்கினோம்.


அடிக்கல் நாட்டுவதில் இருந்து, switch மாட்டுவது வரை ஒவ்வொரு விஷத்திலும் அதிக கவனம் எடுத்துக் கொண்டு, வெட்டியாக ஒரு நிமிடம் கூட இல்லாமல் வீட்டை பற்றியே சிந்தனை, ஷாஜஹான் கூட தாஜ்மஹால் கட்ட இவ்வளவு யோசனை செய்து இருக்க மாட்டார்... நமக்கு தான் பரோபகார சிந்தனை வேற அதிகமாச்சே, அதனால் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று, பெற்ற அனுபவங்களை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள எங்கள் அலுவலகத்தில் உள்ள internal வலைப்பதிவை உபயோகித்து, அனைவரயும் ரம்பம் போட்டுக் கொண்டு இருந்தேன். அதில் பாதி பேர், வந்து சந்தேகம் எல்லாம் கேட்க, ஒரு builder rangeக்கு பீலா விட்டு திரிவதும் பழக்கமாகி விட்டது.


அலுவலகமே எதிர்ப்பார்க்கும் விஷேஷமாக எங்கள் வீடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்து, ஆடி ஆனி மாசம் காரணமாக ஜுன் 10 அன்று என்று கிரஹபிரவேஷ நாளும் முடிவானது.


என்னடா தலைப்பிற்க்கும் பதிவிற்க்கும் ஒரு சம்பந்தம் இல்லையே என்று யோசிப்பவர்களுக்கு, இது வரை கொடுத்தது முன்னுரைதான், இப்போதுதான் பதிவே ஆரம்பிக்கின்றது என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்...


கிரஹபிரவேஷத்திற்க்கான வேலைகளை நானும் என் கணவரும் பகிர்ந்து கொள்ளும் போது tiffen எற்ப்பாடு செய்யும் வேலை எனக்கு வந்தே போதே எனக்கு சனி பிடித்தது என்று நினைக்கிறேன். பக்கதில் சேகர் ஸ்டோரில் விலை எல்லாம் விசாரித்து சரி என்று சொன்னேன். அட்வான்ஸ் வேண்டுமா என்று கேட்டதற்க்கு அவர் வேண்டாம் என்று சொல்ல்வே சரி என்று விட்டு விட்டேன். விஷேஷத்திற்கு மூன்று நாள் முன்னே நடந்த்து இது. ஞாயிறு அன்று விஷேஷம் என்பதால், சனி முழுவதும் துணிமணிகள் எடுப்பது, அழைப்பது என்று படு வேகமாக சென்றுக்கொண்டு இருந்த்து, நடு நடுவில் வெங்கட், கேட்டருக்கு போன் செய் என்று சொல்லிக்கொண்டே இருந்த்தார், எனக்கு இருந்த வேலைகளில் இப்போ செய்கிறேன் அப்போ செய்கிறேன் என்று தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. போன் நம்பர் என் பையில் வேறு இருந்த்தால் போய் தேடி எடுத்து செய்து கொள்ளலாம் என்று நினைத்து இருந்தேன் எப்படி மறந்த்தேன் என்று எனக்கே தெரிய வில்லை...


ஞாயிறு காலையில் நான்கு மணிக்கு எழுந்திற்க்கும் போது தான் ஞாபகம் வந்தது அச்சச்சோ கேட்டர்ர் விஷயம் சுத்தமாக மறந்து விட்டது என்று, சரி, போன் நம்பர் எடுத்து இப்போது செய்யலாம் என்று பார்த்தால், போன் நம்பரையை காண வில்லை. பையை கொட்டி கவிழ்க்காத குறையாக தேடினாலும் கிடைக்க வில்லை. வெங்கட்டிடம் சொன்னால் அவருக்கு பயங்கர டென்ஷன் வந்து விடும், கொன்றே போட்டு விடுவார் என்பதால், சரி நாமேதான் சமாளிக்க வேண்டும் என்று, அனைவரும் காரில் கிளம்ப நானும் என் சித்தி பெண் காமாட்சியும் டூ வீலரில் கிளம்பினோம், நேரில் சென்று பார்த்து விடலாம் என்று சென்றால், காலை 4.30 மணிக்கு அங்கே திறக்கவே இல்லை... வயிற்றுக்குள் லேசாக பட்டாம் பூச்சீ பறக்க ஆரம்பித்தது...


நான் வேறு ஆர்டர் கொடுக்கும் போது, எவ்வளவு பேர் வருவார்கள் என்று இப்போது சரியாக தெரியவில்லை, அதனால் சனிக்கிழமை போன் செய்து சொல்லுகிறேன் என்று சொல்லி இருந்தேன்... தோராயமாக 150 பேர் என்று இப்போது வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் நான் போன் செய்து confirm செய்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.


காமாட்சியோ எதற்க்கு டென்ஷனாக இருக்கின்றீர்கள், கண்டிப்பாக வந்து விடும், அட்வாண்ஸ் கொடுத்து இருக்கின்றீர்களே, பயம் தேவை இல்லை என்று கூற, அய்யோ அட்வாண்ஸ் அவர் வேண்டாம் என்று சொன்னதால், தரவில்லையே என்று நான் சொல்ல, அவளுக்கு கொஞ்சம் பயம் வந்த்து... எனக்கு தைரியம் சொல்லுவதாக அவள், மெனு எல்லாம் சொல்லி இருப்பீர்கள் இல்லையா, கண்டிப்பாக செய்து விடுவான் என்று சொல்ல, அய்யோ, பைனாப்பிள் புட்டிங் ஆ இல்லை கேசரியா என்று கேட்டதற்க்கு யோசித்து சொல்லுகிறேன் என்று வேறு சொல்லி இருந்தேன், அதையும் சொல்லவில்லையே என்று நினைவு வந்தது...


சரி எப்படியாவது வந்து சேர்வதற்க்கு அட்ரெஸாவது கொடுத்து விட்டேனா என்று பார்த்தால், அதை கொடுப்பதற்க்குதானே வெங்கட் நாளெல்லாம் நினைவு படுத்திக் கொண்டு இருந்தார், அதையும் தான் மறந்து விட்டேனே. வண்டியில் மேடவாக்கம் போய் சேர்வதற்க்குள் பயத்திலேயே பாதி உயிர் போய்விட்டது.


6.15 மணிக்கு ஹோமம் எப்படியும் 8 மணி வரை ஆகி விடும், டிபன் 8 மணிக்கு வர வில்லை என்றால், பயங்கர பிரச்சனை ஆகிவிடும், மேலும் நானும் அவரும் தான் மனையில் அமர வேண்டும், அப்படி இல்லை என்றாலும் வேறு எதாவது எற்பாடு பண்ண வழி இருக்குமே என்று எண்ணியவாறே என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.


caterer கொடுத்த பேப்பரில் பிரேமி கிச்சன் என்று பார்த்த நினைவு இருக்க, telephone directory service ல் போன் செய்து டெலிபோன் நம்பர் கேட்போம் என்று கேட்டால், அப்படி ஒரு பெயரில் எந்த ஒரு நம்பரும் இல்லை என்று தெரிந்ததும் எமதர்மராஜாவின் டார்கெட் இன்றைக்கு நாம் தான் போல என்று தெளிவாக தெரிந்தது.


அட்வாண்ஸ் கொடுக்க வில்லை, மெனு சொல்லவில்லை, அட்ரெஸ் கொடுக்க வில்லை, எத்தனை பேருக்கு என்று சொல்ல வில்லை, போன் செய்து கேட்க நம்பரும் இல்லை, என் நம்பரும் அவருக்கு கொடுக்கவிலை, மந்திர மாயாஜாலத்தில் டிபன் வந்தால் தான் உண்டு என்ற நிலைமையில், என் ஆபீஸில் பணிபுரியும் நண்பனின் வீடு சேகர் ஸ்டோரின் அருகில் இருப்பதால், அவனுக்கு போன் பண்ணி கேட்போம் என்று காலை 5 மணிக்கு போன் செய்தால், உலகின் ஒன்பதாவது அதிசயமாக அவன் line ல் கிடைக்க, உலகில் உள்ள பணிவை எல்லாம் குரலில் கொண்டு வந்து, கொஞ்சம் போய் பார்த்து, போன் நம்பர் வாங்கி தா டா என்று கேட்டுக்கொண்டேன். எப்போதும் ஆணவத்திலே ஆடும் குரல் பணிவாக இருக்கவும் அவனுக்கே நிலமையின் சீரியஸ்னெஸ் புரிந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆபீஸின் foot ball match க்குகாக சீக்கிரம் எழுந்தவன், எனக்கு பேருபகாரமாக விசாரிக்க சென்றான்.


அதற்க்குள் எத்தனை நேரம் தான் எந்த பிரச்சனையும் இல்லை என்று சமாளிப்பது, வெங்கட்டிற்க்கு தெரிந்து விட, கன்னா பின்னா என்று திட்டு மழை. சண்டை மேகங்கள் மூண்டு வர, நான் எப்படியாவது ஏற்ப்பாடு செய்து கொள்ளுகிறேன் என்று வீர சபதம் விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு, அருகில் ஏதாவது ஹோட்டலில் சொல்லலாம் என்று ஒரு இடம் தேடி கண்டுபிடித்து, பேசி, அவசர கால நடவடிக்கையாக பூரி, உப்புமா போல ஏதாவது செய்து தருகிறேன் என் வயிற்றில் பால் வார்த்தார். இம்முறை அவருடைய போன் நம்பரை மறக்காமல் வாங்கி கொண்டு வந்து சேர்ந்தேன்.


அதற்க்குள் நன்பன் கடைக்கு போய் விசாரித்து கேட்டரர் நம்பரை வாங்கி தந்தான், கைகள் நடுநடுங்க, (இண்டர்வீயூக்கு கூட இப்படி ஒரு நடுக்கம் வந்தது இல்லை) போன் செய்தால், எந்த ஜென்மத்து புண்ணியமோ, அவர் பயங்கர casual ஆக, ரெடி ஆகி விட்டது மேடம், எங்கே வேளச்சேரி டெலிவெரியா என்று கேட்க, அய்யா புண்ணியவானே தயவு செய்து மேடவாக்கத்தில் கொண்டு வந்து தந்து விடு என்று சொல்லிவிட்டு ஒரு புழுப்பார்வையுடன் என் வீட்டுக்காரிடம், பாஷா ரஜினி போல, நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான், என்று வீராப்பு வசனம் பேசி மற்ற ஏற்ப்பாடுகளை செய்ய சென்றேன்.

ஹோமம் குறித்த நேரத்தில் ஆரம்பித்து நன்றாக நடந்தது, விருந்தாளிகள் வருவதற்க்குள் டிபனும் வந்து சேர்ந்தது. வந்தவர்களை விசாரித்து, வீட்டை சுற்றி கான்பித்து, சாப்பிட அழைத்து சென்று, கவனித்து அனுப்பி, மறுபடியும் வீட்டட சுத்தம் செய்து, அப்பாடா வீட்டையும் கட்டிப்பார்த்துவிட்டோமடா சாமி, என்று பெருமூச்சு விட்டோம்.

ஜெயா.

2 comments:

Anonymous said...

I really enjoyed reading your post. I laughed so hard. It brought so many wonderful memories for me. Thanks.By the way I have one sis called Jeya too.

Rumya

ஜெயா said...

Thanks for your compliment rumya. It was dreadful experience, but since it all ended well, i could write it like this, cannot imagine what would have happened otherwise :)

Jaya.