Tuesday, June 26, 2007

ஷாருக்கானும் நாங்களும்...

பள்ளிப்படிப்பு முடியும் வரை திரைப்படங்களுக்கு அவ்வளவாக சென்றதில்லை அப்படியே சென்றாலும், குடும்பத்துடன் செல்வதோடு சரி, ஆறு மாதற்க்கு ஒரு படம் அல்லது ஒரு வருடத்தில் ஒன்று. இப்படியே சென்று கொண்டு இருந்தால் எப்போதுதான் குஞ்சுகளுக்கு சிறகு முளைத்து வானத்தில் பறப்பது, எதற்க்கும் ஒரு ஆரம்பம் வேண்டாமா?? நாங்கள் தோழிகளாக வெளியே சென்று படம் பார்த்தது ஒரு சூப்பர் அனுபவம்.

பன்னிரண்டாம் வகுப்பு பரிட்சை முடிந்த கடைசி நாள் - ஒரு பக்கம் அய்யய்யோ பள்ளி வாழ்க்கை முடிந்து விட்டதே, நண்பர்களை பிரிந்து செல்ல வேண்டும், புது கல்லூரி வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்க வேண்டுமே என்ற பீதி எல்லாம் வயிற்றை கலக்கி கொண்டு இருக்க, ஒரு புறம் கடைசியாக எங்கேயாவது சேர்ந்து செல்லலாம் என்று முடிவு எடுத்த போது, யாமினி (என் தோழி) யின் தோழியோட அப்பா (தோழியோட தோழி நம்ம தோழிதான் பார்த்துக்கோங்க..) எங்கள் அனைவருக்கும் அப்போது சக்கை போடு போட்டுக்கொண்டு இருந்த "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" ஹிந்தி படத்திற்க்கு டிக்கட் வாங்கி கொடுத்து அனைவரும் போய் வாருங்கள் என்றார்.

மொத்தம் ஒன்பது தோழிகளாக ராயபேட்டையில் உள்ள மெலொடி தியேட்டருக்கு சென்றோம். இதில் வந்த பாதி பேருக்கு ஹிந்தி தெரியாது. ஆகவே seating arrangement வந்து, ஒரு ஹிந்தி தெரிந்தவருக்கு இரு புறத்திலும் ஹிந்தி தெரியாதவர் என அமர்ந்து கொண்டோம். எனக்கு ஹிந்தி தெரியும்.
படம் ஆரம்பித்தவுடனே, மற்றும் ஷாருக் கான் வரும் போது எல்லாம் தியேட்டர் முழுதும் பயங்கர சத்தம், அதுவும் எங்களுக்கு கொஞ்ச தூரத்தில் அமர்ந்து இருந்த ஒரு கும்பலில் ஆண் பெண் வித்தியாசமில்லாமல் பயங்கர சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தனர். நாங்கள் சே என்ன இது பொது இடத்தில் இப்படி நடந்து கொண்டு இருக்கிறார்களே என்று திட்டிக் கொண்டு இருந்தோம்.

படம் சூப்பராக போய்க் கொண்டு இருந்த போதும், இரு பக்க்கதில் உட்கார்ந்து இருந்தவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு சின்ன டயலாகாக இருந்தாலும், ஹேய் என்னடி சொல்லறான் என்று கேட்டு உயிரை வாங்குவாள்கள், அதை நான் சொல்லுவதற்க்குள், அடுத்த டயலாக் ஆரம்பித்து விட்டு இருக்கும்... பாட்டுகளுக்கு அர்த்தம் சொல்லு என்ற அளவிற்கு, படத்தை ஈடுபாட்டுடன் பார்க்கிறார்களாம், நான், "அடியே இந்த அளவிற்க்கு பாடத்தில் உனக்கு சந்தேகம் வந்திருந்தால், நீதான் state first வந்து இருப்பே" என்று நக்கல் அடிக்க கொஞ்ச நேரம் சும்மா இருந்தாள்கள். ஆனால் விவகாரமான விஷயங்களுக்கு எல்லாம், அவர்களுக்கே அர்த்தம் புரிந்து விடும், எப்படி என்றால் அது அப்படி தான்டி என்று நக்கல் அடித்துக் கொண்டு இருப்பார்கள்.

ஒரு வழியாக படம் பார்த்து விட்டு வெளியே வந்து, நானும் யாமினியும் எங்கள் scooty எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம், திரும்பி வரும் போது அந்த வழி one-way, அதுவும் இல்லாமல் எங்களுக்கு அப்போது எல்லாம் ரொம்ப வழி தெரியாது. சரி எல்லாரும் போகும் ரோட்டில் வெளியே வந்தால்,
ராயப்பேட்டை மணிகூண்டு சிக்னல் வந்த்து, எப்படி போகனும் என்று இருவருக்கும் தெரியாது. யாமினி எப்படி போகலாம் ஜெயா என்று கேட்க, நானும் படம் பார்த்த மயக்கத்தில், "யாமினி, ஷாருக்கான் படம் இப்போதானே பார்த்த, அதில் தலைவர் என்ன சொல்லறார், எப்போதும் குறுக்கு வழியை எடுக்காதீங்க.. நேர் வழியா போய் காரியத்தை சாதிச்சுக்கோங்க, சோ நம்ம நேரா போகலாம்" என்று டயலாக் விட, அவ அதுக்கு மேல அதையே வேத வாக்கா எடுத்துகிட்டு follow பன்ன, ரைட்ல போய் இருந்தா 15 நிமிஷத்தில் போய் சேர்ந்து இருக்க கூடிய சைதாப்பேட்டைக்கு, triplicane, beech road, radhakrishanan saalai, ttk road எல்லாம் சுத்தி அங்கங்கே வழி விசாரிச்சுகிட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் வீணடிச்சு 45 நிமிஷம் கழிச்சு போய் சேர்ந்தோம்.

அன்னையிலிருந்து வாழ்க்கையின் லட்சியமா, ஐரோப்பா டூர் செல்வதும்,
லண்டன் ரயில்வே ஸ்டேஷனில் பாட்டு பாடுவதும் சேர்ந்து கொண்டது.
அதன் பிறகு யாமினி திருச்சிக்கு படிக்க சென்றுவிட, நான் லோக்கல் கல்லூரியிலேயே குப்பை கொட்ட எங்கள் நட்பு கடிதங்களில் வளர்ந்து கொண்டு இருந்தது (இ மெயில் இல்லாத காலம் பாருங்க).

முதல் ஆண்டு லீவில் வந்த போது, திரும்ப ரோஹினி தியேட்டரில் அதே படத்தை திரும்ப திரையிட்டு இருக்கின்றான் என்று தெரிந்தவுடன் போய் பார்க்க கால்கள் பரபரத்துக்கொண்டு இருந்தன. யாமினி வீடு ரொம்பவே கண்டிப்பானவர்கள், எங்கேயாவது செல்வதற்க்கு permission கிடைப்பது ரொம்பவே கஷ்டம். அவள் அம்மாவிடம், ரொம்ப கெஞ்சி கூத்தாடி permission வாங்கினோம், ஆனால் கோயம்பேடு என்று சொல்லவில்லை, ஏதோ பக்கத்தில் உள்ள தியேட்டர் என்று சொல்லிவிட்டு விட்டோம் ஜூட்.

தியேட்டரில் ஓரே சத்தம் போட்டும் கூச்சலிட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தோம், பின்னே ஒரு வருஷம் காலேஜ் அனுபவம் சும்மாவா என்ன?? கொஞ்ச நேரத்தில் எங்களுக்கே தெரிந்தது, அமைதியான தியேட்டரில் சத்தம் போட்டுக் கொண்டு இருந்த ஒரே ஆட்கள் நாங்கள் தான் என்று, மனதில் ஒரு வருடத்திற்க்கு முன் நாங்கள் திட்டின பெண்கள் தான் ஞாபகம் வந்தனர். ஓகோ ரவுடிகள்
இப்படிதான் உருவாக்கபடுகின்றார்கள் என்று தெரிந்து கொண்டோம்.

திரும்ப சாதுப்பெண்கள் போல வீடு வந்து சேர்ந்து விட்டோம். எப்படி யாமினி அம்மாவிற்க்கு தெரிய வந்தது என்று நினைவு இல்லை, பேப்பர் பார்த்தார்களா அல்லது டிக்கட் பார்த்தார்களா என்று, ஆனால் வாங்கினோம் ஒரு டோஸ் மூட்டை. பயங்கர திட்டு, பொய் சொன்னதிற்கு, சொல்லாமல்
அவ்வளவு தூரம் scooty எடுத்துக் கொண்டு தனியாக போனதிற்க்கு என்று வைத்து தாளித்து எடுத்து விட்டார்கள். வாய் மூடிக்கொண்டு எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அடித்த கொட்டத்திற்க்கு கம்மிதான் என்று ஜீரணித்து கொண்டு விட்டோம்.

படம் பார்த்த அன்றிலிருந்து யாமினியும் திருச்சி டிரெயினுக்கு லேட்டாக சென்று பார்த்தால் யாரவது கை கொடுப்பார்களா என்று, சொட்டை தலை டிக்கெட் கலக்க்டரை தவிர ஒரு பயலையும் காணோம். நாம் கஜோலாக இருந்தாலும், ஷாருக்கானுக்கு கொடுத்து வைக்க வில்லை என்றால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?

ஜெயா.

No comments: