Monday, June 25, 2007

சுட்டதும் சுடாததும்...

லைப்ரரி என்றால் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? புத்தங்கள், அலமாரிகள், பேப்பர் வாசனை, நூலக நன்பர்கள், என்று வளரும் இல்லையா.. எங்களுக்கோ, பின்னால் குரல் கேட்க கேட்க திரும்பிப் பாராமல் தலை தெரிக்க ஒடின அனுபவம் தான் ஞாபகம் வரும்... என்ன என்று கேட்கீறீர்களா, பதிவை தொடர்ந்து படியுங்கள்..

நான், எனது அக்கா ஹேமா மற்றும் எனது டியுஷன் தோழி யாமினி மூவரும் மிகச் சிறந்த தோழிகள். நானும் யாமினியும் ஒரே வகுப்பு ஆனால் வெவ்வேறு பள்ளிகள், எனது அக்கா எங்களை விட ஒரு வயது தான் மூத்தவர். ஆகையால் எது செய்தாலும் சேர்ந்து செய்வோம். மூவரிடமும் சைக்கிள் உண்டு.

நாங்கள் ஒன்பதாவது படித்துக் கொண்டு இருந்த நேரம் என்று நினைக்கிறேன். புத்தக்ங்கள் படிப்பது மூவருக்குமே ரொம்ப பிடிக்கும். நேரம் காலம் இல்லாமல், கையில் கிடைக்கும் எந்த புத்தகமாக இருந்தாலும், பின்னாடி அட்டையின் கடைசி எழுத்து வரை படிக்காமல் கீழே வைத்தால் பிரளயம் வந்து விடாதா என்ன??

எங்கள் அப்பா எங்களுக்கு புத்தக்ங்கள் வாங்கி கொடுத்தே ஏழை ஆகி விட்டதாக சீன் போட்டுக் கொண்டு இருக்கவும், அதே நேரம் யாமினியின் அம்மா டி.நகரில் உள்ள ரவிராஜ் லென்டிங் லைப்ரரியில் மெம்பர் ஆனதும், கடவுளின் கருணைப் பார்வைதான் என்று நினைக்கிறேன், அவர்கள் புத்தகம் எடுத்தார்களோ இல்லையோ, நாங்கள் தான் நிறைய எடுத்து இருப்போம்.

நார்த் உஸ்மான் சாலையில், ஒரு பழைய கட்டிடத்தில், வீரராகவன் நெய் கடைக்கு பக்கத்தில் இருக்கும், ரவிராஜ் லைப்ரரி. கீழே இடம் பத்தாம்ல் மேலே ஒரு இடமும் எடுத்து, ரொம்ப பேர் எடுக்காத பழைய புத்தகங்களை அங்கே வைத்து இருப்பார்கள். முக்கியமான புத்தகங்கள் கீழே இருக்கும்.

எங்கள் மூன்று பேர் தலை தெரிந்தாலே, ரவிராஜ் - அவர் தான் ஓனர், தலைமேல் கை வைத்து விடுவார். ஒரு அரைமணி நேரம், அனைத்து புத்தகங்களிலும், 10 பக்கத்தை படித்து விட்டு, (இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் புத்த்கத்தையே படித்து விடுவோம்...) நான்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு, அவர் மேஜைக்கு வந்து entry போடுவோம்.

ரங்கநாதன் தெருவில் அமர்ந்து காய் வியாபரம் செய்யும் காய்காரியை விட அதிகமாக பேரம் பேசுவோம். அவர் ஒரு புத்தகத்திற்கு 3 ரூபாய் சொன்னால், ஐம்பது பைசாவிற்க்கு அரை மணி நேரம் பேசுவோம். அடுத்த நாளே கொண்டு வந்து ரிடர்ன் செய்வதாக சத்தியம் செய்வோம். இப்போது நாங்கள் எடுக்கா விட்டால், இந்த புத்தக்ங்கள் shelf ல் தூங்கதானே போகின்றன, ஐம்பது பைசா பார்க்காதீர்கள், என்று எங்கள் சொல்வன்மையால் சுழற்றி சுழற்றி அடிப்போம். மூன்று வாயாடிகள் எங்கே அவர் ஒருவர் எங்கே, நாட்கள் செல்ல செல்ல நாங்கள் வைப்பது தான் விலை என்று ஆகிவிட்டது.

இதற்கு நடுவில் ஹேமாவிற்கு விடுமுறை நாட்களுக்கு வேலை செய்ய ரவிராஜ் அவர்களே அங்கு வந்து வேலை செய்ய கேட்டார். மாடியில் உள்ள புத்தகங்களை அடுக்க வேண்டும் மற்றும் அங்கே, இருந்து வாடிக்கையாளர்கள் எடுக்கும் புத்தகங்களுக்கு சீட்டு எழுதி கீழே கொடுத்து அனுப்ப வேண்டும். ஒரு மாததிற்கு 500 ரூபாய் சம்பளம், தினம் ஒரு புத்தகம் எடுத்து செல்லலாம் படிப்பதற்கு. கரும்பு தின்ன கூலியா என்று என் அக்காவும் அங்கே பணி புரிய ஆரம்பித்தார்.

நாங்கள் படித்திருந்த நல்ல புத்தகங்கள் எங்களுக்கு வேண்டும் என்று யோசித்தோம். காசு கொடுத்து வாங்கும் அளவிற்க்கு அப்போது இல்லை என்பதால், அதுவும் ரவிராஜ் தேவைக்கு அதிகமான புத்தகங்கள், அதுவும் எங்களுக்கு பிரியமான பல புத்தகங்கள் வைத்து இருப்பதாக தோன்றியதால், அவரிடமிருந்து கொஞ்சம் "எடுத்துக் கொள்ளுவது" தப்பில்லை என்ற முடிவிற்கு வந்தோம்.

அதன் படி ஒரு யோசனை செய்தோம், முந்தைய நாளே, எங்களுக்கு பிடித்த புத்தகங்களை எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு இடத்தில் ஒளித்து வைப்பது, லைப்ரரி செல்வது என்றால் எலாஸ்டிக் வைத்த மிடி அல்லது சுடிதார் அணிந்து செல்வது, வேலையை மூன்றாக பிரித்து கொள்ளுவது - ஒருவர் நிஜமாக புத்த்கத்தை தேடுவது, ஒருவர் கல்லாவில் யார் உக்கார்ந்து இருக்கிறார்களோ அவரிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திருப்புவது, மற்ற ஒருவர் பதுக்கி வைத்திருக்கும் இடத்தில் இருந்து புத்தகத்தை நைசாக எடுத்து, யாரும் பார்க்காத நேரத்தில், வயிற்றிக்கும் மிடிக்கும் நடுவில் வைத்து விடுவது, ஐஸ்வர்யா ராயிற்க்கு போட்டியாக வயிற்றை flat ஆக்கி, புத்தகம் உள்ளே இருப்பது தெரியாமல் மறைத்து வெளியே வருவது. வேலை ஆகிவிட்டது என்று தெரிந்ததும், அனைவரும் ஒரு இடத்திற்கு வந்து அன்று மட்டும் பேரம் கம்மியாக பேசி அவர் அதிர்ச்சியில் வாயடைத்து போயிருக்கும் போதே சைக்கிளை மிதித்துக் கொண்டு எஸ்கேப் ஆகி விடுவது, அடுத்த தெருவில் நுழைந்து புத்தகத்தை எடுத்து பையில் போட்டுக்கொண்டு எப்போதும் போல வீட்டுக்கு வந்து விடுவது.

மாடியில் இருக்கும் புத்தக்கங்களை சுடுவது மிகவும் சுலபம், ஒன்று அங்கே எங்கள் அக்கா உட்கார்ந்து இருப்பார், இல்லை ஒரு தாததா இருப்பார். அவருக்கு கண்ணும் தெரியாது, எந்த் சாமர்த்தியமும் பத்தாது, கீழே ஓனரையே ஏய்ப்பவர்களுக்கு இவர் ஜுஜுபி... ஆகையால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணுமுமாக எங்கள் வீட்டு லைப்ரரியும் வளர்ந்து வந்தது, நிறைய மில்ஸ் அண்ட் பூன்ஸ், கொஞ்சம் தமிழ் புத்தகங்கள், மற்றும் பழைய தொடர்கதைகளின் பைன்டட் வெர்ஷன் என புத்தங்கள் ஒரு 30 சேர்ந்து இருக்கும் என நினைக்கிறேன்.

ஒருநாள் எங்கள் வழக்க பிரஹாரம் மாடியில் தாத்தாதானே என்ற அலட்சியத்தில் கொஞ்சம் கவனக்குறைவாக புத்தகத்தை எடுத்து சொருகும் போது, பொடிப்பையன் ஒருவன் பார்த்து விட்டான் என்று நினைக்கிறேன்... நாங்கள் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தாத்தாவிடம் ப்ளேடு போட்டு விட்டு, கிழே இறங்கி சென்றால், ஓனர், ஒரு மார்க்கமாக் நின்று கொண்டு இருந்தார். உள்ளுக்குள்ளே அலாரம் அடிக்க,
அவர் பேச ஆரம்பிப்பதற்க்குள், இன்றக்கு எங்களுக்கு புத்த்கம் எதுவும் வேண்டாம், நாளைக்கு பரிட்சை இருக்கிறது என்று வாயிற்க்கு வந்த காரணத்தை சொல்லி, கையில் இருந்த புத்தகத்தை அவருடைய டேபிளில் போட்டுவிட்டு எடுத்தோம் ஓட்டம். அன்றக்குப் பார்த்து என் மடியில் கனம், அவரோ கடைக்கு வெளியே ஒடி வந்து, எங்களை கூப்பிடுகிறார், யாரையோ அவர் கூப்பிடுகின்ற பாவனையில் பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாப்பிற்கு ஓடுவது போல மூவரும் ஓடினோம். சாலையில் போய்க்கொண்டு இருந்தவர்கள், கடை வைத்து கொண்டு இருந்தவர்கள், "பாருங்கம்மா உங்களைத்தான் கூப்பிடுகிறாங்க" என்று எடுத்துக் கொடுக்க, "யோவ், உனக்கு வேண்டுமென்றால் நீ போய் என்ன என்று கேட்டுக்கோ, எங்களை ஆளை விடு" என்று மூச்சிரைக்க ஓடிப்போய், அவர் கண்ணிலிருந்து மறைந்த்தும், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று நினைத்துக் கொண்டு, விழுந்து விழுந்து சிரித்தோம்.

அத்தோடு நாங்கள் ரவிராஜ் லென்டிங் லைப்ரரி பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை என்று சொல்லவும் வேண்டுமா. ரொம்ப நாளைக்கு நார்த் உஸ்மான் ரோடு பக்கம் போகவில்லை, போனாலும், சைக்கிளை வேகமாக மிதித்து ஓடியே போய்விடுவோம்.

எங்கள் வீட்டிலும் யாமினி வீட்டிலும், "என்னடி லைப்ரரியே பழியா கிடப்பீங்களே, என்ன ஆச்சு" என்று கேட்டனர். "இல்லமா அங்கே இருக்கற புத்தகங்களை எல்லாம் படிச்சு முடிச்சுட்டோம், வேற லைப்ரரி தேடிக்கிட்டு இருக்கோம். " நாங்க சொன்னதில் பின்பாதி தான் உண்மை என்பது உங்களுக்கு புரிஞ்சு இருக்குமே..

ஜெயா.

8 comments:

பொன்ஸ்~~Poorna said...

யக்கோவ்,
யாமினிங்கிறீங்க, ஜெயான்னு பேரெழுதி இருக்கீங்க.. ரவிராஜ்னு ஒரு புத்தகநிலையம் மெய்யாவே இருக்கு.. உண்மையை சொல்லுங்க, இது கதையா நிஜமா? ;)

ஜெயா said...

100% நிஜம். நார்த் உஸ்மான் ரோட்ல இருக்கு இந்த லைப்ரரி. லொகேஷனே எழுதி இருக்கேனே. நாங்க அடிச்ச லூட்டிகளில் நினைத்தாலே சிரிப்பு பொத்துகிட்டு வர நினைவு இது. ஏன் கதை என்று நினைச்சீங்க என்று தெரிஞ்க்கலாமா?

ஜெயா.

பொன்ஸ்~~Poorna said...

பெயர்க்குழப்பத்தினால தாங்க.. மத்தபடி நல்லா எழுதிருக்கீங்க... இது, உங்க புது வீட்டுக் குழப்பம் எல்லாமே.. :)

ஜெயா said...

பொன்ஸ், யாமினி என்பவள் என்னோட ஆருயிர் தோழி, ஹேமா என்னோட அக்கா. எங்க மூன்று பேரை வைச்சுதான் எழுதி இருக்கேன், பெயர் குழப்பம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. தவறு ஏதாவது இருந்தால் மன்னிச்சுக்கோங்க.

இரண்டு நாளாக ஒரே flash back ஞாபகமாக இருந்ததால, ஒவ்வொரு நினைவா பதிவு போடலாம் என்று ஆரம்பித்து இருக்கின்றேன். இந்த கதை நடந்து 12 வருஷம் ஆகிடுச்சு.

அப்பப்போ வந்து படிச்சுட்டு போங்க.

ஜெயா.

Rdx said...

யாமினி அக்கா sorry..ஜெயா அக்கா
நல்லாவே கதை வுடுரறிங்க! sorry எழுதுறீங்க!

ஜெயா said...

அடகடவுளே, நடந்த கதையை எழுதினால் நம்புவதற்க்கு இவ்வளவு கஷ்டமாக இருக்கா??

யாமினி, உதவிக்கு வாயேன், வந்து சாட்சி சொல்லு, இது நம்முடைய அட்வென்சர்ஸ்ல ஜுஜுபி மேட்டர் என்று...

ஜெயா.

yazhini said...

hey all..jaya solluradhu noothukku nooru unmain..year endru parthal 1993-il idhu ellam nadandadhu..innum nerayai memories..creates nostalagic feeling. jaya sonna madiri last 2 days-a ore flashbacks dhaan.innum neraya jaya poduva endru ninaikiren..and keep visiting the blog and happy reading it.

yaamini

யோசிப்பவர் said...

அடப் பாவிகளா!!!

"பாவத்தில் பெரிய பாவம் யாதெனில்
புத்தகம் சுட்டுப் படித்தல்"

என்பது உங்களுக்கெல்லாம் தெரியாதா?;-)

பி.கு. : அந்த லைப்ரரில மெம்பர் ஆகிறதுக்கு என்ன Procedure?